Thursday, October 20, 2011

சிருங்கேரி

நாட்டிய சாஸ்திரத்துல வரக்கூடிய ஒன்பது விதமான ரசங்கள்ல ஒரு ரசத்துக்கு பேர் சிருங்காரம். சிருங்காரம் அப்பிடின்னா அழகு!னு அர்த்தம் வரும். சிங்காரினு அம்பாளை செல்லமா நாம சொல்லும் வார்த்தை கூட இந்த சிருங்காரத்துலேந்து வந்த ரீங்காரம் தான். சிருங்கம் + கிரி = சிருங்கேரி, அழகான குட்டி மலை தான் இந்த சிருங்கேரி. மலைனாலே அழகுதான், அது என்ன அழகான மலை? கங்கைக்கு ஈடான துங்கா நதி ஆடி ஆடி வரும் அழகுக்காக இந்த பேர் வந்துருக்குமோ? இல்லைனா அமைதியே உருவான தட்பவெப்பம் இருக்கர்தால இந்தபேர் வந்துருக்குமோ?னு பலவிதமான கேள்வி நம்ப ஹ்ருதயத்துல எழும்பி வந்தாலும் சிருங்காரமான நம்ப சிங்காரி 'சாரதா'-ங்கர பேரோட உக்காசுண்டு ஆட்சி பண்ணர்தால தான் இந்த பேர் வந்ததுருக்கும்னு எனக்கு தோனர்து!!சாரதாம்பா

சிருங்கேரி கர்னாடக மாநிலத்துல இருக்கும் மங்களூர் பக்கத்துல இருக்கும் ஒரு சின்ன மலை பிரதேசம். இயற்கை அழகு மட்டும் இல்லாம ஆன்மீக முக்கியத்துவமும் உள்ள ஒரு ஸ்தலம். தர்மத்தை கலிகாலத்துல காப்பாத்தி கொண்டு போகர்துக்காக ஆதி சங்கரர் ஸ்தாபிச்ச முதல் ஆம்னாய பீடம் இங்கதான் இருக்கு. தன்னோட சிஷ்யாளோட பாதயாத்திரையா வந்துண்டு இருக்கும் போது துங்கா நதியோட கரைல பிரசவ வேதனைல இருந்த ஒரு தவளையோட முகத்துல வெய்யில் படாம இருக்க ஒரு நாகம் குடை பிடிச்சுண்டு இருந்த காட்சியை பாத்துட்டு இந்த இடத்துல இருக்கும் அமைதியான சூழ்னிலை ஆத்மவிசாரத்துக்கு ஸ்ரேஷ்டமானது!னு தீர்மானம் பண்ணி ஸ்தாபிச்ச பீடம் சிருங்கேரி சாரதா பீடம்.


ஆதி சங்கரருக்கும் மீமாம்ஸா சாஸ்த்ரத்துல மஹாபண்டிதரும் ஆன மண்டனமிஸ்ரருக்கும் நடுல வாக்குவாதம் நடந்தது. வாக்குவாதத்துல சங்கரர் ஜெயிக்காத பட்சத்துல சம்சார ஆசரமத்துக்கு வரணும், ஜெயிக்கர பட்சத்துல மண்டனமிஸ்ரர் சன்யாஸம் வாங்கிண்டு சங்கரர் சிஷ்யராகனும்!னு முடிவு பண்ணி வெச்சுருந்தா. இவாளோட வாக்குவாதத்துக்கு சரஸ்வதியோட அம்சமும், மண்டனமிஸ்ரரோட மனைவியும் ஆன உபய பாரதி மத்யஸ்தமா இருந்தா. கடைசில சங்கரர் ஜெயிச்சு மண்டனமிஸ்ரர் சன்யாஸம் வாங்கிண்டதுக்கு அப்புறம் உபயபாரதி சத்யலோகம் திரும்பலாம்!னு யோசிச்சப்ப “இல்லைடி அம்மா!! இந்த லோகத்துல ஆத்ம ஞானத்துக்கு ஆசைபடக் கூடிய சத்மனுஷாளுக்கு அனுக்கிரஹம் பண்ணர்துக்கு பூலோகத்துல இருக்கனும்!”னு சொல்லி வனதுர்கா மந்திரம் மூலமா உபயபாரதியை அன்பால கட்டுப்படுத்தி வேண்டிண்டார். அவளும் சங்கரரை பின் தொடர்ந்து வரர்தாகவும், எந்த இடத்துல நீ திரும்பி பாத்தாலும் அங்கையே பயணம் முடிவடையும்னு சொல்லி பின் தொடர்தாள் நம்ப சாரதாம்பாள். சரியா சிருங்கேரி வந்த உடனே சங்கரர் திரும்பி பாத்ததால் அங்கையே நிலையா தங்கிட்டதா வரலாறு சொல்லர்து.

இந்த இடத்துல சாரதா பீடம் ஸ்தாபனம் பண்ணிட்டு அதுக்கு பாதுகாப்பா நாலு திக்குலையும் துர்கை,காலபைரவர்,ஆஞ்சனேயர் & காளிகாம்பா காவல் தெய்வமா பிரதிஷ்டை பண்ணிட்டார். ஜன நடமாட்டமே இல்லாத இந்த நாலு வனாந்தர சன்னதிகளும் அந்தர்முக தியானம் பண்ணக்கூடியவாளுக்கு தேடினாலும் கிட்டாத ஒரு அற்புதமான இடங்கள். சாரதா பீடத்துக்கு பக்கத்துலையே ஒரு சின்ன பாதை வழியா போனா சுமாரா 150 படிகளுக்கு மேல அழகான மலஹானிக்கரேஷ்வரர் கோவில் இருக்கு. இந்த கோவில்ல இருக்கும் சிவலிங்கமும் அம்பாளும் அழகு சொட்டிண்டு இருப்பா. ஒரு யுகத்துக்கு முன்னாடி கட்டப்பட்ட கோவில்னு தலபுராணம் சொல்லர்து. இந்த கோவிலோட முக்கியமான ஒரு சிறப்பு இங்க இருக்கும் ஸ்தம்ப கணபதி. சிருங்கேரி குருபரம்பரையை சேர்ந்த ஆச்சார்யர் வருஷத்துல சில முக்கிய நாட்கள்ல இங்க வந்து பூஜை பண்ணர்து வழக்கம். அப்பிடி அவா வரும்போது கூடவே அவாளோட பூஜைல உள்ள உம்மாச்சியையும் கொண்டு வருவா. அவா பூஜைல இருக்கும் கணபதிக்கு பூஜை பண்ணிட்டு மலஹானிக்கரேஸ்வரருக்கும் பூஜை பண்ணுவா. நரசிம்ம பாரதி ஸ்வாமிகள் ஒரு தடவை திடீர்னு சாதாரண ஒரு நாள்ல கோவிலுக்கு வந்துட்டார்.ஸ்தம்ப கணபதி

ஆச்சார்யர் தங்கி இருக்கும் பிரதேசத்துக்கு நரசிம்ம வனம்னு பேர். துங்கையோட ஒரு கரைல சாரதாம்பா கோவில், இன்னொரு கரைல நரசிம்மவனம். இரண்டு கரையையும் நரசிம்ம சேதுனு ஒரு பாலம் இணைக்கர்து. நரசிம்ம பாரதி ஸ்வாமிகள் காலகட்டத்துல பாலம் கிடையாது, அந்த கரைக்கு படகுல தான் போகனும். மழைகாலங்கள்ல வெள்ளம் பெருகித்துன்னா அதுவும் முடியாது. இப்போ திடுதிப்புனு ஸ்வாமிகள் கோவிலுக்கு வந்ததால அவாளோட பூஜைல இருக்கும் உம்மாச்சியை கொண்டு வரலை. இந்த கோவில்ல கணபதி விக்ரஹம் கிடையாது. முதல் பூஜை கணபதிக்கு பண்ணாம எப்பிடி பண்ண முடியும்?னு யோசிச்சிட்டு அங்க இருந்த ஒரு கல்தூணுக்கு ஒரு குடம் ஜலம் அபிஷேகம் பண்ண சொன்னார். அதுக்கு அப்புறம் கணபதி உம்மாச்சியோட ஸ்லோகத்தை சொல்லிண்டே ஒரு மஞ்சள் துண்டால கணபதி ரூபத்தை கோடு மாதிரி போட்டார். முழு ரூபமும் போட்டு முடிச்சு ஸ்வாமிகள் கையை எடுத்த உடனே மஞ்சள் பட்ட இடம் மட்டும் ஒரு இன்ச் புடைப்பு சிற்பம் மாதிரி வெளில வந்துதாம். உடனே சாங்கோபாங்கமா உம்மாச்சி பூஜையை பண்ணிட்டு அவரோட அப்பா அம்மாவுக்கும் பூஜையை பண்ணினாராம். ஸ்தம்பம்னா தூண்னு அர்த்தம். ஸ்தம்பத்துலேந்து பிரசன்னமானதால ஸ்தம்ப கணபதினு பேர் வாங்கிண்ட அந்த சுவாமி அதுக்கு அப்புறம் வந்த ஆச்சார்ய பரம்பரைல எல்லாருக்கும் பிரியமான மூர்த்தியா இருக்கார். நியாயமான வேண்டுதல்களை தட்டாம நிறைவேத்தி வச்சுண்டு இருக்கார். சிருங்கேரில அவசியம் தரிசனம் வேண்டிய ஒரு அற்புதமான மூர்த்தி.

எங்க பாத்தாலும் ஒரே பாக்கு மரம், தென்னை மரம்னு அழகான வனப்பிரதேசமா காட்சி அளிக்கர்து. சாரதாம்பாளோட கோவிலுக்கு பக்கத்துல 800 வருஷம் பழமையான அழகான வித்யாசங்கரர் ஆலயம் இருக்கு. விஜய நகர சாம்ராஜ்யம் உண்டாக காரணமான வித்யாரண்யர் காலத்துல இதை கட்டியிருக்காளாம். அற்புதமான சில்பசாஸ்திர அழகை இந்த கோவிலோட ஒவ்வொரு பாகத்துலையும் உணரலாம். சதா சர்வ காலமும் சம்சார சாகரத்துல மாட்டிண்டு திண்டாடிண்டு இருக்கும் எல்லா மனுஷாளுமே வருஷத்துக்கு 2 நாளாவது பந்தபாசங்களை மறந்து நிஸ்சிந்தையா இந்த மாதிரி ஸ்தலங்கள்ல போய் இருந்துட்டு வந்தா மனசுக்கும் புத்திக்கும் ரொம்ப நல்லது. பதவி,அதிகாரம்,சொத்து,சுகம்னு மனசுக்கும் மூளைக்கும் கர்வத்தை தரும் எல்லா விதமான நினைப்பையும் மூட்டை கட்டி நம்பாத்து ஸ்டோர் ரூமுக்குள்ள போட்டுட்டு, ஐபோன்/ஐபாட்னு நம்மை பாடாபாடு படுத்தும் தேவையில்லாத ஜடவஸ்துக்கள் இல்லாம, கைசெலவுக்கு மட்டும் காசு வெச்சுண்டு பரதேசியாட்டமா இருந்துட்டு வந்தாக்க என்ன ஆகும்!னு நான் சொல்லமாட்டேன். போய் இருந்துட்டு வந்து என்ன ஆச்சு?னு நீங்க சொல்லுங்கோ!!

போன தடவை அங்க போய் தங்குவதற்கு ரூம் கேட்டு மடத்து ஆபிஸ் போனபோது, “சாரதா கிருபா வேணுமா? குருகிருபா வேணுமா?”னு கேட்டா. “ரெண்டுமே எனக்கு வேணும், இருந்தாலும் குருகிருபாவே தாங்கோ!”னு சொன்னேன் (குருகிருபா இருந்தா சாரதா கிருபா பின்னாடியே வந்துடும்!னு மனசுல ஒரு நம்பிக்கை). மேல சொன்ன ரெண்டு பேருமே கட்டிடத்தோட பெயர்கள். :)ஸ்ரீ நரஸிம்ம பாரதி ஸ்வாமிகள்

சிருங்கேரி சம்பந்தமா ஒரு உம்மாச்சி ஸ்லோகம் இப்போ பாக்கலாமா?

ச்ருதாயாம் யதுக்தெள ந ஹி ச்ராவ்யசேஷம்
ஸுரூபே ச த்ருஷ்டே ந த்ருச்யாவசேஷம்
நதேங்க்ரெள ந க்ருத்யம் தயாப்தெள ந லப்யம்
ந மாஹாத்ம்ய ஸீமா ச யேஷாம் பஜே தான்!!

ஸ்லோகத்தோட பொருள் - யாரோட மஹிமைக்கு எல்லையே இல்லையோ, யாரோட வார்த்தைகளை கேட்டதுக்கு அப்புறம் கேக்கர்துக்கு வேற ஒன்னுமே இல்லையோ, யாரோட சுந்தரமான ரூபத்தை தரிசனம் பண்ணினதுக்கு அப்புறம் பார்பதற்கு வேற ஒன்னுமே இல்லையோ, யாரோட பாதகமலத்துல நமஸ்காரம் பண்ணினதுக்கு அப்புறம் பண்ணர்த்துக்கு வேற ஒன்னுமே இல்லையோ, யாரோட பரிபூர்ணமான கிருபாகடாக்ஷத்தை சம்பாத்யம் பண்ணினதுக்கு அப்புறம் சம்பாத்யம் பண்ண வேற எதுவும் இல்லையோ அத்தகைய குருநாதரை பணிகிறேன்

Thursday, August 11, 2011

சுந்தரி

எல்லாருக்கும் நமஸ்காரம்! உம்மாச்சியோட அனுக்ரஹத்துல எல்லாரும் செளக்கியம்னு நம்பறேன். உம்மாச்சி காப்பாத்துல எழுதி ரொம்ப நாள் ஆகர்து. எழுதக்கூடாதுனு எண்ணம் இல்லை, இருந்தாலும் ஓரளவுக்காவது மனசு லயிச்சு உருப்படியா எழுதனுமோ இல்லையோ.

அம்பாளை குழந்தையா தியானம் பண்ணர்து ரொம்ப செளகர்யமான விஷயம் தெரியுமோ! நன்னா அழகா வகிடுஎடுத்த கூந்தல், சந்திரன் மாதிரியான வெண்மையான நெற்றி, அழகான கருப்புவானவில் மாதிரியான புருவங்கள்,புருவமத்தில அழகான ஒரு குங்கும பொட்டு,குட்டி வெள்ளை ரோஜாபூ உள்ளே ஆடும் கருவண்டுகள் மாதிரி ரெண்டு கண்விழி, அதுக்கு வரப்பு கட்டி விட்ட மாதிரி மை,அழகான குழி விழும் ரெண்டு குட்டி கன்னம்,பண்ணி வெச்ச மாதிரி அழகான குட்டி மூக்கும் ரெண்டு காதும், அந்த காதுல குட்டி குட்டியா ரெண்டு தங்க ஜிமிக்கி,குறு நகை செய்யும் குட்டி வாய்..... இந்த மாதிரி ரூபத்துல அம்பாளை மனசுல நினைச்சு பாருங்கோ! அதுக்கு அப்புறம் நாம வேற யாரையும் சுந்தரியாவே நினைக்க மாட்டோம்.பாலா திரிபுரசுந்தரி

லலிதா ஸஹஸ்ரனாமத்தோட ஆரம்ப தியான ச்லோகத்துல அம்பாளை பாத்து சிந்தூராருண விக்ரஹாம்னு வர்ணிக்க ஆரம்பிச்சு இருப்பா. ஓவியம் தீட்டரோது அந்த ஓவியர்களோட கற்பனையானது கடல் அளவுக்கு பரந்து விரிய ஆரம்பிச்சுடும். அந்த சமயம் அவாளுக்கு நேரடி வர்ணங்களான சிகப்பு,பச்சை,மஞ்சள் மாதிரியான நிறங்களோட அவா கற்பனை கட்டுப்பட்டு நிற்காமல் ரெண்டு மூனு வர்ணங்களை கலந்து வர்ணஜாலம் காட்ட ஆரம்பிச்சுடுவா. அதே மாதிரி அம்பாளோட ரூபலாவண்யத்தை சொல்லும் போது நன்னா நிறமா இருந்தானு சொல்லாமல் குங்கும சிகப்பையும் சூரிய சிகப்பையும் கலந்த மாதிரி இருந்தாளே!னு ஆரம்பம் ஆகும். ஏதுடா இது? சூரிய சிகப்புனு சொன்னதுக்கு அப்புறமும் நமக்கு சந்தேகம் குறைய மாட்டேங்கர்து. கடைசி வரைக்கும் சந்தேகப்படர்துலையும் கேள்வி கேக்கர்துலையுமே நம்ம ஜென்மாவை கழிச்சுட்டு சமத்தாட்டமா நிக்கர்துல நமக்கு நிகர் நாம தான். மாத்தி மாத்தி கேள்வி கேட்டாக்க மேதாவிலாஸம் ஜாஸ்தி ஆகுமே தவிர ஆத்மானுபவம் ஒரு போதும் வாய்க்கப் போகர்து இல்லை. ஒவ்வொரு சமயத்துலையும் சூரியனோட நிறம் மாறுபடும். சிவப்பு,இளஞ்சிவப்பு,மஞ்சள்,வெளிர் மஞ்சள் மறுபடியும் ரத்த சிவப்பு. இதுல எந்த நிறம்னு நமக்கு புரியர்துக்கு அபிராமி பட்டர் “உதிக்கின்ற செங்கதிர்”னு பளிச்னு சொல்லி இருப்பார். உதயகால சூரியனுக்கு அருணன்னு தான் பேர். பட்டரும் இதே மாதிரி தான் ஆரம்பிப்பார். உதிக்கின்ற செங்கதிர் உச்சித்திலகம்...னு அது போகும். அபிராமி பட்டர்தான் சங்கரரா வந்தாரோ?னு நினைக்கும் படியா செளந்தர்யலஹரி & லலிதா ஸஹஸ்ரனாமத்தோட வியாக்கியானம் அபிராமி அந்தாதில பல இடத்துலையும் நாம ரசிக்க முடியர்து.

பிரம்மாண்ட புராணத்தில் லலிதோபாக்கியானம் பிரிவுல ஸ்தோத்ர கண்டத்திலேந்து வரர்து தான் இந்த அழகான லலிதா ஸஹஸ்ரனாமம். லீலா வினோதங்கள் நிறைந்தவள் லலிதா, லீலை யாரு ஜாஸ்தியா பண்ணுவா? குழந்தைகள் தானே. லலிதாவோட நாம விஷேஷம் பாத்தாலும் கொஞ்சி விளையாடுபவள்னு அர்த்தம் வருது, இன்னொரு வகைல பார்த்தால் 'எப்போதும் சந்தோஷத்தை தருபவள்'னு வருது. கொஞ்சி விளையாடக் கூடிய பெண் குழந்தை எப்போதும் மனசுக்கு சந்தோஷத்தை தரத்தானே செய்யும்!! :) குழந்தேள் என்ன அவ்வளவு சுலபத்துல எல்லார்கிட்டையும் கொஞ்சி விளையாடுமா என்ன? யார் கிட்ட அதுக்கு மனசு லயிக்கர்தோ அவா கூடத்தானே களிக்கும். அதுனாலதான் இதை பாராயணம் பண்ணரோது அம்பாளை குழந்தையா நினைச்சு அவளோட விளையாடர மாதிரியான நிஷ்கபடமான மனசோட பாராயணம் பண்ணனும்!னு ஒரு விதி உண்டு.

பொதுவா சுந்தரினா ரூபவதினு அர்த்தம் வரும். ஆனா வெறும் ரூபலாவண்யம் எத்தனை நாளைக்கு நமக்கு சந்தோஷத்தை தரும். அப்படியே வச்சுண்டாலும் நிறையா பேர் பாக்கர்துக்கு லக்ஷணமாதான் இருக்கா, ஆனா குணம் இருக்கமாட்டேங்கர்தே! அப்ப எதை வச்சு தான் சுந்தரினு முடிவு பண்ணர்து?னு நமக்கு குழப்பமா இருக்கும். சில சமயங்கள்ல குழப்பமும் நல்லது தான். அப்பதானே நல்லதா பாத்து எடுத்துக்க முடியும். அப்ப யாரை தான் சுந்தரினு சொல்லர்து? யாரு ரூபவதியாவும் குணவதியாவும் இருக்காளோ அவா தான் சுந்தரி. ரெண்டும் சேர்ந்தாப்ல இருக்கும் ஆள் கிட்டர்து ரொம்ப கஷ்டமாச்சேனு அசடாட்டமா நாம முழிக்கவே வேண்டாம்..

அம்பாளுக்கு திரிபுர சுந்தரினு ஒரு பெயர் ரொம்பவும் ப்ரபல்யம். மூனு லோகத்துலையும் அவளே சிறந்த அழகி!னு அதுக்கு அர்த்தம். ரூபலாவண்யத்துல மட்டும் இல்லை குணத்துலையும் அவளே அழகி. சாக்தர்களுக்கு இவள் சரியான திருட்டு சுந்தரி! முதல்ல நல்ல பிள்ளையாட்டமா மனசுக்குள்ள வந்து ஒளிஞ்சுப்பா, அதுக்கு அப்புறம் மெதுமெதுவா சகலத்துலையும் வியாபிக்க ஆரம்பிச்சுடுவள். கடைசில அந்த சாதகன் லோகத்தோட கண்களுக்கு பித்து பிடிச்சவன் மாதிரி இருப்பான். வாஸ்தவத்துல பித்தனோட பித்துதான் அவனை பிடிச்சுருக்கு..:)தாயுள்ளத்தோட நம்மோட மனசை முழுசா திருடிண்டு போகர்தால இவள் சரியான திருட்டு சுந்தரி! :)சுந்தரி...

விளையாடி முடிச்சதுக்கு அப்புறம் சாளவாய் வடியும் குட்டி வாயால் தரும் எச்சில் முத்தம் போல, அன்பர் என்பவர்கே கனம்தரும் பூங்குழலாள் அபிராமி கடைகண்களே. அம்பாளை ஆராதனை பண்ணர்துக்கு ஒருத்தனுக்கு வாய்ப்பு கிட்டர்துனாக்க அது அம்பாளே மனசு வெச்சு குடுக்கும் ஒரு பொக்கிஷம். இந்த வரலெக்ஷ்மி விரத்தை அந்த ஒரு வாய்ப்பா கருதி அம்பாளை நிஷ்கபடமான பக்தியோட மஹாலெக்ஷ்மி தாயாரா ஆராதனை பண்ணி அபிராமி பட்டரும் சங்கரரும் சொன்ன எல்லா சம்பத்தையும் அம்பாளோட பிரஸாதமா நாம் பெறுவோமாக..

குறிப்பு - 2001 கோடை விடுமுறைல அடியேன் விரும்பி படித்த “தெய்வத்தின் குரல்” நினைவுகளில் கொஞ்சம் இங்கு வார்த்தையாக்கப்பட்டது.

Thursday, March 31, 2011

செளரம்

இன்னிக்கி நாம பாக்கப் போகும் வழிபாடுமுறை செளரம். சூரியன் உம்மாச்சியை முழுமுதற் கடவுளா ஆராதனை பண்ணும் முறைக்கு செளரம்னு பேர். லோகத்துல உம்மாச்சி இருக்கார் இல்லைனு சொல்லறவா எல்லாரும் ஒத்துமையா ஒத்துக் கொண்டு கண்ணுல ஒத்திக்கும் ஒரு உம்மாச்சி யாரு?னு கேட்டாக்கா அது நம்ப சூரிய நாராயணர் தான்.குதிக்கும் குதிரையுடன் உதிக்கும் செங்கதிரவன்

'கண்ணில் தெரியும் கடவுள்'னு இவரை தாராளமா சொல்லலாம். லோகத்துல நடக்கும் எல்லா விஷயத்துக்கும் எதாவது ஒரு வழில நம்ப சூரி உம்மாச்சியோட சம்பந்தம் இருக்கும். எந்த தேசத்துக்கு போனாலும் காத்தால எழுந்த உடனே தரிசனம் பண்ணர்த்துக்கு நம்ப கூடவே வரும் ஒரு உம்மாச்சியும் இவரே. சிலபேர் மணி பாக்கர்துக்கே நோக்கியா போனை தேடும் இந்த காலகட்டத்துல, சூரியன் உம்மாச்சிதான் ஒரு காலத்துல கடிகாரமாகவும் இருந்தார்னு சொன்னா நம்பமுடியுமா? கிழக்க உதிக்கும் நேரம் ப்ராதக் காலம், தலைக்கு மேல வந்து நின்னா மாத்யானிக காலம், மேற்கே போய் மறையும் நேரம் சாயங்காலம்னு வந்துண்டு இருக்கார். இடைகாடர்னு ஒரு சித்தர் சந்தியாவந்தனம் பண்ணும் போது அர்க்யம் குடுக்க வேண்டிய காலத்தை பத்தி சொல்லும் போது " காணாமல் கோணாமல் கண்டு கொடு!"னு சொல்லி வச்சுட்டு போயிருக்கார். கர்மானுஷ்டானங்கள் எல்லாத்தையும் தொலச்சவாதானே சித்தர், அவர் எதுக்கு சந்தியாவந்தனம் எனும் அனுஷ்டானம் பத்தி கவலைபடறார்னு எல்லாம் குதர்க்கமா ஆராய்ச்சி பண்ணாம ஒழுங்கா பண்ணினா நமக்குதான் ஷேமம்.


உதயகால சூரிய ஒளி கண்ணுக்கு நல்லது கிடையாது அதனால காணர்த்துக்கு முன்னாடியும், மத்தியான கால சூரியன் உஷ்ணம் ஜாஸ்தியா இருந்தாலும் போட்டோ காமிரா மாதிரி ஒரு துவாரம் வரும்படியா கையை வச்சுண்டு சூரியனை பாத்தாக்கா கண்ணுக்கு பலம், அஸ்தமன காலத்துல வரும் சூரிய ஒளி கண்பார்வைக்கு ஸ்ரேஷ்டமானதால கண்டு குடுக்க சொல்லி இருக்கா!னு விளாவாரியா தெரியாம நாம பண்ணினாலும் பலன் கிட்டாமல் இருக்காது.

ஒரு விதத்துல பாத்தாக்க சூரியன் உம்மாச்சி ஒரு யோகி!னு சொல்லலாம். பலனை பத்தி கொஞ்சமும் சிந்தனை பண்ணாம கர்மஸ்ரத்தையா தனுக்கு குடுக்கப்பட்ட கார்யத்தை நாள் தவறாம பண்ணறாரே!! அவர் ஒரு நல்ல ஞானியும் கூட, இல்லைனா ஆஞ்சனேயருக்கு குருனாதரா இருந்து பாடம் சொல்லி குடுத்து இருக்க முடியுமா! நவக்ரஹங்கள்ல இவர்தான் ப்ரதானமான மூர்த்தி. ராமாயணத்துல ஒரு இடத்தில் அகஸ்திய ரிஷி ராமனுக்கு சூரியன் சம்பந்தமான ஒரு உம்மாச்சி ஸ்லோகம் சொல்லி தருவார். அந்த உம்மாச்சி ஸ்லோகத்துக்கு ஆதித்ய ஹ்ருதயம்!னு பேர். யஜுர் வேதத்துல ஸூர்ய நமஸ்காரம்னு தனியா உண்டு, வித்வான்கள் அதை 'அருணம்'னு சொல்லுவா. ஆவணி மாதம் ஆதவனுக்கு உகந்த மாதம். ஆவணி ஞாயிற்றுக் கிழமைகள்ல ப்ராதக்காலத்துல இந்த அருணப்ரஷ்ணம் பாராயணம் பண்ணி நமஸ்காரம் பண்ணினா ரொம்ப நல்லது. அது பண்ண முடியாட்டாலும் ஆதித்யஹ்ருதயம் சொல்லி 12 நமஸ்காரம் பண்ணலாம்.உதயகால பாஸ்கரன்

சூரி உம்மாச்சிக்கு உகந்த வர்ணம் சிவப்பு அதனால சிகப்பு நிற புஷ்பங்கள் அவருக்கு ரொம்ப ப்ரீதி, குறிப்பா சொல்லனும்னா செந்தாமரை கிடைச்சா ஸ்ரேஷ்ட்டம். கோதுமை அவரோட தான்யம் கோதுமைல மிதமான திதிப்பு போட்டு நெய்மணத்தோடு நல்ல மனதுடனும் பாயஸம் பண்ணி சமர்ப்பணம் பண்ணினா சந்தோஷமா வாங்கிப்பார்.

ஆரம்ப காலத்துலேந்து தூய்மையான மனஸோடையும் தேகத்தோடையும் ஆதித்யனை ஆராதனை பண்ணரவாளுக்கு , சுடர் மிகும் அறிவுடன் சுட்டும் விழிச்சுடராய் கண்பார்வையும் கிட்டும். மாறுபட்ட குணாதிசயங்கள் உள்ள பலபேரை ஒரே திசையில் வழி நடத்தி செல்லக் கூடிய தலைமை குணம் கிடைக்கும், நேர்மையான வழியை மட்டுமே மனசு எப்போதும் சிந்திப்பதால் நிமிர்ந்த நடையும், நேர்கொண்ட பார்வையும்,புவியில் யாருக்கும் அஞ்சாத வைர நெஞ்சமும் கிட்டும், எடுத்த காரியத்திலிருந்து சற்றும் மாறாத மன உறுதி கிட்டும்.
நவகிரஹங்கள் பத்தி எதிகாலத்துல வரப்போகும் பதிவுல இன்னும் கொஞ்சம் விஷயமும் ஜாதக கட்டத்துல சூரியன் இருக்கர்துனால வரும் சாதக பாதகங்கள் & அபூர்வமான ஒரு யந்த்ரத்தோட படமும் பாக்கலாம் சரியா!!தர்மபத்னிகள் சமேதராய்....

சூரியனோட உம்மாச்சி ஸ்லோகம் பாக்கலாமா இப்போ!!

//ஜயதி ஜயதி சூர்ய சப்தலோகைக தீபஹ
கிரணம் ருதித தாப ஸர்வ துக்கஸ்ய ஹர்த்தா
அருணகிரணகம்ய சாதிராதித்ய மூர்த்திஹி
பரமபரம திவ்ய பாஸ்கரஸ்தம் நமாமி//

ஸ்லோகத்தோட பொருள் - ஏழு லோகங்களுக்கும் தீபஜோதியாய் இருப்பவரும்,எல்லா விதமான துக்கங்களை போக்குபவரும்,தேஜஸுடன் ஜொலிப்பவரும்,உன்னதமானவைகளில் எல்லாம் உன்னதமானவரும் ஆன பாஸ்கரனை நமஸ்கரிக்கிறேன்.

குறிப்பு - இந்த பதிவுடன் ஷட்தர்சனம் எனும் தலைப்பில் வந்த உம்மாச்சி பதிவுகள் பூர்ணம் அடைந்தது. வரும் காலங்களில் குட்டி குட்டி தலைப்புகளில் உம்மாச்சி & பாரம்பர்யம் சம்பந்தமான பதிவுகளை நாம் பார்க்கலாம்.

Thursday, February 10, 2011

சாக்தம்

இந்த உலகம் முழுவதும் காலம்காலமா எல்லோராலயும் பின்பற்றப்பட்டு வரும் ஒரு வழிபாட்டு முறை இந்த சாக்தம். அன்னை வடிவில் பரம்பொருளை ஆராதனை செய்யும் முறைக்கு சாக்தம்னு பகவத்பாதர் அழகான பெயர் தந்தார். அம்மாவை விரும்பாத பிள்ளைகள் இந்த லோகத்துலேயே கிடையாது. அதனால இந்த ஆராதனைக்கு எப்போதும் தனித்துவம் உண்டு.வாலை குமரியடி கண்ணம்மா!!

ஒரு குழந்தை கைல 6 மிட்டாய் இருக்குன்னு வெச்சுக்கோங்கோ, அதை எல்லாருக்கும் வினியோகம் செய்யரோது கடைசியா ஒரு மிட்டாயை மட்டும் அந்த குட்டி குழந்தை தன்னோட அழகான வாய்ல இரண்டு மூனு தடவை வச்சு ருசி பாத்துட்டு கண்ணத்தில் குழி விழும்படியா ஒரு பொக்கை வாய் சிரிப்பு சிரிச்சா அந்த மிட்டாய் எவ்ளோ மதுரமான ஒரு வஸ்துவா இருக்கனும்? அதை மாதிரி தான் சாக்தமும், பகவத்பாதர் தன்னோட ஆத்மார்த்தமான ஆராதனையா எடுத்துண்டது சாக்தத்தைதான்..:) அதனால தான் அவர் பல உம்மாச்சி ஸ்லோகம் எழுதின அதே வேளையில், அம்பாள் சம்பந்தமா தன்னை மறந்து நிறையா பண்ணி வெச்சுருக்கார்.

அவரோட கற்பனாசக்தி காலை நேர சூரியனாய்,மணக்கும் மல்லிகையாய்,அதில் கிறங்கும் வண்டாய்,பொதிகைமலை தேனாய்,தாமிரபரணி ஊற்றாய்,அதில் எழும் அழகிய காற்றாய்,கார்காலத்து மயிலாய்,அதற்கு இசைக்கும் கருங்குயிலாய்,மாலை நேர இளவெயிலாய் பல வர்ணஜாலம் காட்டியது அம்பாள் மீதான வர்ணனையில் தான் என்பது உலகம் அறிந்த உண்மை.மலயத்வஜன் பெற்ற பெருவாழ்வு...:)

சாக்த முறையை அதிதீவிரமா கடைபிடிக்கறவாளுக்கு சாக்தர்கள்நு பேர். மாத்ரு பாவம் இவா கிட்ட ரொம்ப ரொம்ப ஜாஸ்தியா இருக்கும். எல்லா வஸ்துவும் இவாளுக்கு அம்பாளாவே தெரியும். அவாளுக்கு கிடைக்கும் எல்லா ஐஸ்வர்யமும் அம்பாள் போட்ட பிச்சை! எனும் எண்ணம் அழியாமல் இருக்கும். ஒரு வசனம் கூட உண்டு //உண்ணும் உணவு,உடுக்கும் உடை,பருகும் நீர்,மெல்லும் வெற்றிலை எல்லாம் அவள் இட்ட பிச்சை//னு பெருமையா சொல்லிப்பா.

இந்த அம்மா இருக்காளே அவளுக்கு தாராளமான மனசு, குழந்தைகள் கேட்டது சாதாரணமான பிற வஸ்துவா இருந்தாலும் அவள் பரவஸ்துவையே சர்வசாதாரணமா "இந்தா கோந்தை! வெச்சுக்கோ சரியாஆஆ!"னு குடுத்து விடும் இளகின மனசு. ஒரு அசட்டுப் பிள்ளை “இங்க கொஞ்சம் பாரேன் அம்மா!னு தொடர்ந்து கேட்டுண்டே இருந்தானாம், ஆனா நம்ப அம்மாவோட காதுல வேற மாதிரி விழுந்து அவள் 14 லோகத்துலையும் கிடைக்கர்த்துக்கு அதிசயமான சாயுஞ்யத்தை குடுத்துட்டாளாம். இதை செளந்தர்யலஹரில ஒரு ஸ்லோகத்துல அழகா சொல்லி இருப்பார் அந்த காலடி மைந்தன். "பவானி த்வம் தாசே!"னு அந்த ஸ்லோகம் ஆரம்பிக்கும்.

பவன் அப்பிடின்னா தலைவன்னு அர்த்தம்,பவனோட ஆத்துக்காரி பவானி. "ஹே பவானி! இந்த தாசனை கொஞ்சம் பாக்கக்கூடாதோடியம்மா!னு நாம கேட்டா அது தயாளமான மனசுடைய அவளோட காதுல "பவானித்வம் தாசே"னு விழுந்து "இந்தா கோந்தை!"னு சர்வசாதாரணமா சர்வலோக சக்கரவர்த்தியா ஆக்கிடுவா. (பவானித்வம் அப்பிடின்னா தலைமைனு ஒரு அர்த்தம் வரும் & நான் நீ எனும் பேதம் அற்ற நீயே நானாகிறேன் எனும் நிலைனும் ஒரு அர்த்தம் வரும்).இதே அர்த்தம் வரும்படியான ஒரு அந்தாதிப் பாடல் நம்ப அபிராமிப்பட்டரோடுது,

//தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே //

அம்பாளோட ஆராதனைல கேரள தேசத்திலையும், நம்ப தமிழ் நாட்டுலையும் இஞ்சிக்கு சிறப்பு இடம் உண்டு. பாசிப்பருப்போடு சேர்ந்து செய்த பொங்கலாகட்டும்,பானகமாகட்டும், நீர்மோராகட்டும் எல்லாத்துலையும் இஞ்சியோட ருசி இருக்கும். இஞ்சி செழுமையாக நல்ல நீர்வளத்தோட இருக்கும் போதும் சரி, நாளாவட்டத்துல காய்ஞ்சு போய் சுருங்கி சுக்கா ஆகும் போது அதோட ருசில எந்த வித்தியாசமும் இருக்காது, அதே போல ஒரு உண்மையான சாதகன் லோகத்தையே பரிபாலனம் பண்ணும் ராஜாவா ஆனாலும் சரி, அடுத்த வேளை சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் நடுத் தெருவில் நின்னாலும் சரி அம்பாளிடம் அவன் கொண்ட திடமான வாத்சல்யம் மாறாம இருக்கனும், அதுதான் உண்மையான சாக்தனுக்கு உரிய லக்ஷணம். அதை உணர்த்தர்துக்கு தான் இஞ்சி அடிக்கடி சேர்க்கப்படுகிறது.மதி சூடும் எங்கள் காந்திமதி

ஒரு நண்பர் என்கிட்ட சும்மாவாவது வம்புக்கு இழுக்கர்த்துக்காக “ஹே தக்குடு! சும்மா அம்பாள்! அம்பாள்!னு சொல்லிண்டு இருக்கியே! பரமேஸ்வரனுக்கு தாயுமானவர்,அம்மையப்பர்னு எல்லாம் பேர் இருக்கு தெரியுமா? உனக்கு உங்க அம்பாள் என்ன பண்ணுவாளோ அதை ஸ்வாமியே பண்ணிடுவார்"னு சொன்னார், அதுக்கு நான், பாரி வள்ளலை போல் பெரிய வள்ளல்னு சொன்னா அப்போ உண்மைலையே பாரிதானே பெரிய வள்ளல்! அதை மாதிரிதான் நீங்க சொல்லர்தும், தாய்மாதிரி நடிக்க முயற்சி பண்ணும் அவருக்கே இவ்ளோ கருணைனா எங்க அம்பாளுக்கு எவ்ளோ கருணை இருக்கும் & நீங்க சொன்ன அம்மையப்பர்லையும் அம்மை தான் முதல்ல வருதுவோய்! அப்பன் எல்லாம் அப்புறம் தான் வருது!னு சொல்லி முடிச்சேன்...:)

அம்பாளை ஆராதனை பண்ணினா என்ன கிட்டும்?னு கேட்டா அது மழைனால லோகத்துல என்ன எல்லாம் விளையும்?னு கேக்கர்த்துக்கு சமானம். அந்த மாதுளம்பூ நிறத்தாளை மனம் உருகி துதிப்பவர் கண்களில் ஒரு ஒளி இருக்கும், காளிதாஸனை ஒத்த கற்பனை வளம் இருக்கும், எப்போதும் மாறாத குழந்தை மனம் இருக்கும்,லோகம் முழுசையும் தன்னோட சொந்தபந்தமா பாவிக்கக் கூடிய தாயுள்ளம் இருக்கும், தேர்ந்தெடுத்து கிட்டிய ரத்தினம் போன்ற நட்புவட்டம் இருக்கும், இந்த்ராபுரியின் அரசனையும் இல்வாழ்க்கையில் இருக்கும் சாமானியனையும் சமமாக பாவிக்கும் நடு நிலையான மனசு இருக்கும்,இன்னும் சொல்ல முடியாத எல்லா கீர்த்தியும் செல்வமும் சாக்தனின் காலடியில் தவம் இருக்கும்.கற்பூர நாயகிக்கு கற்பூர ஆரத்தி...:)ஒரு அம்பாள் உம்மாச்சி ஸ்லோகம் பார்கலாமா இப்போ??..:)

ந ஜானாமி தானம் த சத்யான யோகம்
ந ஜானாமி தந்த்ரம் ந சஸ்தோத்ரமந்த்ரம்
ந ஜானாமி பூஜாம் ந ச ந்யாஸயோகம்
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானீ

ஸ்லோகத்தோட அர்த்தம் - அம்மாடி பவானி! நேக்கு தானம் பண்ணவும் தெரியாது, யோகம் பண்ணவும் தெரியாது, மந்த்ரம் ஸ்தோத்ரம்னு எதுவுமே தெரியாது. உருப்படியா ஒரு பூஜை கூட பண்ண தெரியாதுன்னா பாத்துக்கோயேன். நேக்கு தெரிஞ்சதெல்லாம் நீ மட்டும்தான். நீயே கதி!...;)

Friday, December 31, 2010

ஸ்ரீ வைஷ்ணவம்

//மாதங்களில் நான் மார்கழியாகவும், ருதுக்களில் வசந்த ருதுவாகவும், வ்ருஷங்களில் அரச மரமாகவும்,ஸ்வீட் வகைகளில் திரட்டிப் பாலாகவும் நான் இருக்கிறேன்// - அப்பிடின்னு பெருமாள் சொல்லி இருக்கார். அதனால தானோ என்னவோ அவர் சம்பந்தமான இந்த பதிவு மார்கழி மாசத்துல அமையர்து!..:)இந்த உம்மாச்சி சரியான ஷோக் பேர்விழி! திருமஞ்சனம் ஆச்சா ஆகலையான்னே கண்டு பிடிக்க முடியாது. எப்ப பாத்தாலும் மணக்க மணக்க செண்ட்டை போட்டுண்டு பட்டு வஸ்த்ரம் கட்டிண்டு,கலர் கலரா பூமாலையை போட்டுண்டு இருப்பார்.ஸ்ரீரங்கத்து தேவதையும் அவளோட ஆத்துக்காரரும்...:)

பெருமாள் உம்மாச்சியை முழுமுதற் கடவுளாக ஆராதனை பண்ணும் முறைக்கு ஸ்ரீ வைஷ்ணவம்!னு பேர். மத்த அஞ்சு ஆராதனைக்கும் இல்லாத ஒரு சிறப்பு 'ஸ்ரீ' அடைமொழி இதுக்கு உண்டு. பெருமாள் ஸ்வபாவமாவே ரொம்ப காருண்யமான மூர்த்தி! தங்கமான மனசு அவருக்கு! அப்பிடி எல்லாம் எல்லாரும் சொல்லுவா. சதாசர்வ காலமும் அவரோட ஹ்ருதயகமலத்துல வாசம் செய்யும் மஹாலெக்ஷ்மித் தாயார் தான் அதுக்கு காரணம். வைஷ்ணவத்துல தான் தாயார்! தாயார்!னு கொண்டாடுவா, இல்லைனா நாச்சியார்!னு சொல்லி எஜமானி அம்மாவா ஆகிடுவா.

ஸ்ரீ வைஷ்ணவத்துல தாஸ்ய பாவம் ரொம்ப ரொம்ப ஜாஸ்தின்னே சொல்லலாம். அடியேன்! தாசன்! தாசானுதாசன்,ராமானுஜதாசன் அப்பிடின்னு எல்லாம் தன்னை சொல்லிப்பா. அதே மாதிரி மத்தவாளை கூப்பிடும் போது தேவரீர்! ஸ்வாமி! இந்த மாதிரி ரொம்ப அழகா கூப்பிடுவா.வேடிக்கையா ஒரு வசனம் உண்டு, வைஷ்ணவத்துல இருக்கும் ஒருவர் இன்னொருத்தரை குழிக்குள்ள தள்ளி விடர்தா இருந்தாலும் //தேவரீர், எழரேளா? இல்லைனா தாசன் எழப்பண்ணட்டுமா?//னு அழகா தான் கேப்பாளாம். உண்மையான ஒரு ஸ்ரீ வைஷ்ணவன் தன்னோட ஆச்சாரியனை பார்த்தாக்க அப்பிடியே வெட்டின மரம் மாதிரி நெடுஞ்சான் கிடையா விழுந்து சேவிப்பர்(சேவிக்கனும்!). தாசன் தண்டம்!னு சொல்லுவா, இதுக்கு விஷேஷமான அர்த்தம் உண்டாம், ஆச்சாரியனோட அனுக்கிரஹம் இல்லாத வரைக்கும் அடியேன் ஒன்னுக்கும் உதவாத தண்டம் அப்பிடிங்கர்து அதோட அர்த்தம். தாசன் நமஸ்காரம் பண்ணிக்கறேன்!ங்கர்து இன்னொரு அர்த்தம்.
ஸ்ரீ வைஷ்ணவத்தை பாசுரங்களால வளம் கொழிக்க வெச்சவா ஆழ்வார்கள், அவாள்ல ஒருத்தர் ஒரு தடவை திருப்பதி போய் எல்லாரும் கோவிந்தா! கோபாலா!சொல்லர்தை பாத்துட்டு இங்கையே ஒரு புல்லாக நேக்கு பிறவி கொடு பெருமாளே!னு வேண்டினாராம், அப்புறம் அச்சச்சோ! புல்லுக்கு குறைச்சலான ஆயுசுதானே உண்டு, அதுக்கு பதில் ஸ்வாமி புஷ்கரணில மீனா பொறந்தா உம்மாச்சி ‘ங்கா’ குச்ச ஜலத்துல நாமும் ‘ங்கா’ குச்சலாமேனு ஆசை பட்டு மீனா பொறக்கனும்!னு வேண்டினாராம், திருப்பியும் ஜலம் வத்தி போச்சுனா அங்க இருக்க முடியாதே!னு யோசிச்சுட்டு உம்மாச்சியோட கோவில் வாசல்ல கல்படியா ஆகனும்! கல்படினா அங்கேந்து நகராம சதாசர்வ காலமும் பாலாஜியை பாத்துண்டு இருக்கலாம்னு கடைசியா வேண்டுதலை உறுதி பண்ணினாராம். ராஜபரம்பரைல ஜனனம் பண்ணி பெரிய பெருமாள் பக்தர் ஆன குலசேகராழ்வார்தான் அவர்.

கஜேந்த்ர மோக்ஷ கதை நம்ப எல்லாருக்குமே நன்னா தெரியும், அதுல ஒரு விஷயம் நன்னா கவனிச்சு பாத்துருக்கேளா? முதலை ரூபத்துல வரும் அந்த கந்தர்வன் மஹாகெட்டிக்காரன்னு தான் சொல்லத் தோனர்து, அவனோட சாபம் போகர்துக்கு உம்மாச்சி ஆராதனை பண்ண ஆரம்பிச்சி இருந்தான்னா எத்தனை 1000 வருஷம் ஆகுமே அவனோட சாபம் நிவர்த்தி ஆக, ஆனா கெட்டிக்காரனா பரமபாகவதோத்தமரா இருக்கும் கஜேந்த்ரனோட காலை கெட்டியா கொஞ்ச நேரம் பிடிச்ச ஒடனேயே பெருமாளோட தர்சனம் & அவர் கையாலையே மோக்ஷமும் கிடைச்சுடுத்து.. அதுதான் ஸ்ரீ வைஷ்ணவத்தோட தாச பக்தியோட சிறப்பு. சரணாகதி அடைஞ்சவாளுக்கு பூலோகத்தில் நிதியும் வைகுண்டத்தில் கதியும் உண்டு.கஜேந்த்ராழ்வார்...:)

வைஷ்ணவத்துலையும் பொம்ணாட்டிகளோட வார்த்தைக்கு ரொம்பவே மவுசு ஜாஸ்தி (நான் சொல்லலை, வேளுக்குடியார் சொன்னது). எத்தனையோ ஆழ்வார்கள் இருக்கா, சிரமப்பட்டு லொங்கு லொங்கு!னு எல்லா திவ்யதேசத்துக்கும் போய் ஆயிரக்கணக்குல பாசுர மழை பொழிஞ்சா, ஆனா நெறையா பேருக்கு அவாளோட அற்புதமான க்ரந்தங்களோட பேர் கூட தெரியாது. வில்லிப்புத்தூர்ல ஒரு பொம்ணாட்டி பாவாய்! பாவாய்!னு முப்பதே முப்பது பாசுரம் தான் பாடினா, அதுவும் ஆத்துல இருந்த மேனிக்கே, அவளோட திருப்பாவை தெரியாதவாளே லோகத்துல கிடையாது, கேட்டாக்க பொம்ணாட்டிகளோட பக்திக்கு ஈடு இணை கிடையாது!னு சொல்லிண்டு ஒரு பெரிரிரிய கூட்டமே இங்க கொடி பிடிச்சுண்டு வந்துடுவா....:)

பெருமாளையும் தாயாரையும் எப்போதும் மறக்காம சேவிக்கறவாளுக்கு என்ன கிட்டும்? திருத்துளாவத்தோட மணம் மாதிரி மனசும் புத்தியும் மனம் வீசும், தாஸ்ய பாவம் ஜாஸ்தி ஆக ஆக மனசுல உள்ள அஹங்காரம் எல்லாம் போய் ஸ்படிகம் மாதிரி சிந்தனை பிறக்கும், மன்மதனும் ரதியும் பூலோகத்துல ஜனனம் பண்ணி இருக்காளோ?னு மத்தவா சந்தேகப் படும் படியான வ்யாதி வெக்கை இல்லாத ரூப லாவண்யம் கிட்டும், எத்தனை விருந்தினர் வந்தாலும் சாப்பாடு போடும் படியான தயாள மனசும் அதுக்கு தேவையான தான்யமும் கிட்டும், குபேரனுக்கு பேரனோ!னு வியக்கும் படியான ஸ்ரீநிதி கிட்டும்.கூடாரை வெல்லும் சீர் கோவிந்தன்!!..:)

இப்ப ஒரு உம்மாச்சி ஸ்லோகமும் அதோட அர்த்தமும் பாப்போமா?

//ஆகாசாத் பதிதம் தோயம் யதா கச்சதி சாகரம்

ஸர்வ தேவ நமஸ்காரஹா கேசவம் ப்ரதி கச்சதி
//

அர்த்தம் - ஆகாயத்துலேந்து விழும் அக்கம் எல்லாம் கடோசில சமுத்ரத்தை அடையர மாதிரி, உண்மையான பக்தியோடையும், பவ்யத்தோடையும் நாம பண்ணும் நமஸ்காரம் எல்லாமே கேசவனோட பாதங்களை போய் அடையர்து

Saturday, November 27, 2010

சைவம்

ரொம்ப நாள் ஆச்சு உம்மாச்சி போஸ்ட் போட்டு, இன்னிக்கி ஒரு உம்மாச்சி போஸ்ட் பாக்கலாமா எல்லாரும். சிவன் உம்மாச்சியை முழுமுதற் கடவுளா ஆராதனை பண்ணும் முறைக்கு சைவம்னு சங்கரர் உம்மாச்சி பெயர் வெச்சார். விளையாடிப் பாக்கர்துல இந்த உம்மாச்சிக்கு அவ்ளோ சந்தோஷம் உண்டாம். கடைசில பக்தன் கேட்டதை எல்லாம் கைல குடுத்துட்டு வரும் அளவுக்கு தயானிதியாகவும் இந்த உம்மாச்சி இருக்கார். சைவத்தை விருக்ஷமா வளர வெச்ச நால்வர்ல ஒருவரான திருனாவுக்கரசரை ஒரு சமயம் ஒரு ராஜா சமண மதத்துக்கு மாறியே ஆகனும்னு வற்புறுத்தினானாம். இவர் அதுக்கு ஒத்துக்கவே இல்லையாம். உடனே நனா கொதிக்கர சுண்ணாம்பு கலவாய்க்குள்ள அவரை இறக்குனு இரக்கமே இல்லாம சொல்லிட்டானாம் அந்த ராஜா.தக்குடுவோட உம்மாச்சி!!..:)

நாமா இருந்தா அய்யோ! அம்மா!னு கத்தி இருப்போம் இல்லையா? ஆனா திருனாவுக்கரசர் அழகான ஸ்ருதியோட பதிகம் பாட ஆரம்பிச்சாராம். அதுவும் அவர் பாடின பதிகத்தோட அர்த்தத்தை பாத்தோம்னா இன்னும் ஆச்சர்யமா இருக்கும்.

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே.

பொருள் - லோகத்துக்கே அப்பா மாதிரி இருக்கும் சிவன் உம்மாச்சியோட நிழல்ல நான் இருக்கும் போது எனக்கு சுருதி குத்தம் இல்லாத வீணை நாதமும், அழகான சாயங்கால சமயம் வரும் நிலாவோட குளிர்ச்சியும், ஜிலுஜிலுனு காத்தும்,குளிச்சியான பூவை 'ஒய்ய்ய்ங்' வட்டம் அடிக்கும் வண்டுகளோட சத்தம் இதெல்லாம் இப்போ நான் அனுபவிக்கர மாதிரி இருக்கே!னு சந்தோஷமான முகத்தோட பாடினாராம் அந்த மஹான். அவர் சொன்ன மாதிரியே அவரோட உடம்புக்கு கொதிக்கும் சுண்ணாம்பால 'உவ்வா' எதுவுமே வரலையாம்.

கொதிக்கும் கலனில் அமர்ந்து குதிக்கும் பாதங்களை துதிக்கும் அவர் பாடல்களை உதிக்கும் வேளையில் தியானம் செய்வர் பலர்.
ஒரு சமயம் அசுர சிற்பி மயன் கர்மசிரத்தையா ஒரு நந்தி விக்ரஹம் செதுக்கிண்டு இருந்தாராம். பல வருஷமா செதுக்கிண்டே இருந்தாராம். சில சமயம் மம்மு சாப்டர்தை கூட மறந்தே போய்ட்டாராம். பல வருஷத்துக்கு அப்புறம் அந்த நந்தி விக்ரஹம் செஞ்சு முடிச்சு கடைசியா அந்த விக்ரஹத்துக்கு கண் திறந்தாராம். சில்பசாஸ்த்ர விதிபடி எந்த வித பின்னமும் இல்லாம, கர்ம ச்ரத்தையோட, அன்னாஅகாரம் இல்லாம செய்யப்பட்ட ஒரு விக்ரஹத்துக்கு கண் திறக்கும் போது ஜீவன் வந்துடுமாம். அதே மாதிரி மயன் பண்ணின இந்த நந்திக்கும் ஜீவன் வந்து எழுந்துடுத்தான்.

ஓஓஓ!!! இப்ப என்ன பண்ணனு தெரியலையே!!னு திகைச்சு போன மயன் டபக்குனு கைல இருந்த உளியை வெச்சு நந்தியோட முதுகுல ஒரு கோடு போட்டாராம். உடனே அது அந்த கோலத்துலையே மறுபடியும் சிலை ஆயிடுத்தாம்.அந்த நந்தி இருக்கும் இடம் திருனெல்வேலி ஜில்லால ஆழ்வார்குறிச்சிக்கு பக்கத்துல கடனா நதிக்கரைல இருக்கும் சிவசைல நாதர் கோவில். சிவசைலனாதராத்து மாமியோட பேர் பரமகல்யாணி அம்பாள்.சிவசைலபதி


சிவன் உம்மாச்சி ஆதி காலத்துலையே தன்னோட சரீரத்துல பாதியை அவராத்து மாமிக்கு குடுத்த பெண்ணியவாதி. அதே மாதிரி ஆத்துக்காரியை தலைல தூக்கி வெச்சுண்டு ஆடர பழக்கத்தை லோகத்துக்கு காட்டி குடுத்தவரும் இவர் தான்...;)

சங்கரர் உம்மாச்சி ஸ்தாபனம் பண்ணின ஆம்னாய பீடங்கள் எல்லாத்துலையும் உம்மாச்சியோட பேர் மட்டும் எப்போதுமே சந்த்ரமெளலிஸ்வரன் தான். அம்பாளோட பேர்தான் வித்தியாசப்படும். சங்கரன்.சந்த்ரசேகரன்,சம்பு,உமாபதி,சிவகாமினாதன், நீலகண்டன் இந்த மாதிரி பல நாமதேயங்கள் இந்த உம்மாச்சிக்கு.


இந்த சிவன் உம்மாச்சியை ஆராதனை பண்ணினா என்ன கிட்டும்? ஒரு இடத்துலயே நிலை கொள்ளாம தையா! தக்கா!னு இவர் ஆடிண்டே இருந்தாலும், இவரை ஸ்படிகம் மாதிரியான சுத்தமான மனசோட த்யானம் பண்ணினா அவாளுக்கு மனசை அடக்கும் சக்தி கிட்டும். பசி தாகம் இந்த மாதிரியான சரிர உபாதைகள்னால எல்லாம் அவாளோட மன உறுதியை தளர்த்த முடியாது. ஜோதிஸ்வரூபனா த்யானம் பண்றவாளோட கண்கள் இரண்டும் ஜோதி மாதிரி மின்னும். கைல இருக்கும் எதையும் பற்றுதல் இல்லாமல் அள்ளிக்குடுத்து அதுல சந்தோஷம் அடையக் கூடிய தயாளமான மனசு இவாளுக்கு இருக்கும். சிவன் உம்மாச்சி அவரே ‘அடியார்க்கும் அடியேன்!’னு சொன்னதால அவரோட பக்தாளுக்கும் அந்த பணிவான பாவம்(Baavam) மனசுல எப்போதும் இருக்கும்/இருக்கனும்.தக்குடுவின் அலங்காரத்தில்...:)

இப்பொ ஒரு குட்டி ஸ்லோகம் பாக்கலாமா?

//வஜ்ர தம்ஷ்ட்ரம் த்ரினயனம் கால கண்ட மரிந்தமம்
ஸஹஸ்ரகர மத்யுக்ரம் வந்தே சம்புமுமாபதிம்
//.

(அர்த்தம் - வஜ்ரம் மாதிரியான உடலையும், மூன்று கண்களையும், காலனை கண்டத்தில் மரித்தவனும்,உக்ரமான ஆயிரம் கைகளை உடையவனும் ஆன உமாபதியை வணங்குகிறேன்.)

Friday, October 15, 2010

கெளமாரம்

அனைவருக்கும் தக்குடுவின் நவராத்திரி நல்வாழ்த்துக்கள்

எல்லாரும் உம்மாச்சியோட அருளால செளக்கியம்னு தக்குடு நம்பர்து. இன்னிக்கி கெளமாரம் பத்தி கொஞ்சம் பார்க்க போறோம். முருகனை பிரதான ஆராதனா மூர்த்தியாக வழிபடும் முறைக்கு கெளமாரம்நு சங்கரர் உம்மாச்சி பேர் வச்சார். முருகு=அழகு அதனால முருகன்னு சொன்னாலே அழகன்னு அர்த்தம். கந்தன்,கடம்பன்,கார்த்திகேயன்,குஹன்,ஷண்முகன் அப்படின்னு இந்த உம்மாச்சிக்கு பல நாமதேயங்கள். உமாபதி,லெக்ஷ்மீபதி,மதுரையம்பதி மாதிரி இவருக்கு தேவஸேனாபதினு ஒரு பேர் உண்டு. இந்த பேருக்கு 2 அர்த்தம் உண்டு. தேவஸேனா பதி!னு பிரிச்சா தேவஸேனையோட ஆத்துக்காரர்னு ஒரு அர்த்தம் வரும். அதே சமயம் தேவ ஸேனாபதினு பிரிச்சா தேவர்களின் படைத் தலைவன்னு ஒரு அர்த்தம் வரும்.
தமிழ் கடவுள் அப்பிடின்னு சொன்னாலே அது முருகன் தான். வேற எந்த உம்மாச்சிக்கும் அந்த சிறப்பு பெயர் கிடையாது. இந்த அழகனோட 6 முக்கியமான கோவில்கள்ல திருச்செந்தூர் ஒரு முக்கியமான ஷேத்ரம். சூரபத்மனை வதம் பண்ணாம தன்னோட சேவல் கொடியாவும், மயிலாவும் ஏத்துண்ட அற்புதமான ஒரு இடம். இங்க உள்ள உம்மாச்சி வெற்றி வடிவேலனா காட்சி குடுக்கர்துனால இவருக்கு 'ஜெயந்தி நாதர்'னு ஒரு அழகான பேர் உண்டு.
ஒரு தடவை சங்கரர் உம்மாச்சி தென் திசைல இருக்கும் உம்மாச்சி கோவிலுக்கு எல்லாம் போய் அங்க உள்ள உம்மாச்சி பத்தி குட்டி குட்டி ஸ்லோகம் எல்லாம் சொல்லிண்டு வந்துண்டு இருந்தார். திருசெந்தூர் வந்த அவருக்கு தாங்க முடியாத தொப்பை வலி வந்துதாம், அவரும் என்னலாமோ மாத்திரை மருந்து எல்லாம் முழுங்கி பார்த்தாராம். தொப்பை வலி போகவே இல்லையாம். ஓஓஒ! என்ன பண்ணர்துன்னே தெரியலையே முருகா!னு ரொம்ப வருத்தப்பட்டாராம். அப்போ அங்க வந்த ஒரு கோவில் மாமா இவருக்கு விவிடி(விபூதி)யை ஒரு குட்டியூண்டு பன்னீர் இலைல வெச்சு குடுத்துட்டு டஷ்ஷ்ஷ்ஷ்!னு மறைஞ்ச்சு போய்ட்டாராம்.
சங்கரர் உம்மாச்சி அந்த விவிடியை நெத்தில இட்டுண்டு கொஞ்சம் தொப்பைலையும் தடவிண்டாராம். உடனே, ‘தொப்பை வலி போயிந்தே! போயே போச்சு!’னு சந்தோஷமா சொல்லற அளவுக்கு தொப்பை வலி போயே போய்டுத்தாம். உடனே சந்தோஷத்தோட அவர் சொன்ன உம்மாச்சி ஸ்லோகம் தான் 'சுப்ரமண்ய புஜங்கம்'. மேலும் இந்த பன்னீர் இலை விபூதியை யாரெல்லாம் முழு நம்பிக்கையோட இட்டுக்கராளோ அவாளுக்கு எல்லா விதமான வியாதியும் குணமாகும்!னு எல்லாருக்கும் சொன்னாராம். புஜங்கம் அப்படின்னா அந்த ஸ்லோகம் ஒரு பாம்பு வளைஞ்சு வளைஞ்சு போகர மாதிரி அமைப்புல இருக்கும். முருகர் உம்மாச்சியை எதுக்கு புஜங்க வழில பாடினார்னா, முருகன் பாம்பு ரூபம், கேரளா கர்னாடகால எல்லாம் இந்த உம்மாச்சியை ஸர்ப ரூபமாத்தான் ஆராதனை பண்ணுவா. வடக்க குமாரஸ்வாமி,கார்த்திக்,கார்த்திகேயாநு எல்லாம் ஆசையா அழைப்பா இந்த உம்மாச்சியை.
இந்த உம்மாச்சியை ஆராதனை பண்ணினா என்னவெல்லாம் கிட்டும்னு பார்த்தோம்னா, முருக பக்தாளுக்கு எப்போதுமே ஒரு இளமையான தோற்றம் இருக்குமாம், சஷ்டி கவசத்துல கூட "எந்த நாளும் ஈரெட்டாய் வாழ்வார்" ஒரு வரில வரும். சுப்ரமணியர் நவகிரகங்கள்ல செவ்வாயோட கிரக தேவதை. அதனாலதான் செந்தூரான்!னு ஒரு பேர் இவருக்கு. முருகனடிமைகள் எந்த காரியம் பண்ணினாலும் ஒரு சுறுசுறுப்போடையும்,ஆக்ரோஷத்தோடையும் பண்ணுவா, அதெல்லாம் செவ்வாய் கிரகத்தோட குணாதியசங்கள். ரூபத்துல மட்டும் இல்லாம புத்தியும் இவாளுக்கு எப்போதுமே ரொம்ப இளமையா இருக்கும். முருகனோட வேல் மாதிரி இவாளோட புத்தியும் ரொம்ப கூர்மையா இருக்கும். அசாத்தியமான தைரியம் இவாளோட மனசுல இருக்கும். இவ்ளோ இருந்தாலும் நான் ஒரு முருகனடிமை!னு தன்னை அடிமையாக்கிண்டு தன்னடக்கத்தோட இருப்பார்கள். அவாளுக்கு என்ன பிரச்சனைனாலும் //முருகன் அருள் முன் நிற்கும்//னு நெஞ்சை நிமிர்த்தி தைரியமாக இருப்பார்கள். அம்பாளை ப்ரதானமா ஆராதனை பண்ணக் கூடிய சாக்தர்கள் முருகனோட வேல் வழிபாட்டை விரும்புவார்கள். ஏன்னா, வேல் சக்தியோட இன்னொரு ஸ்வரூபம். வேல் வெறும் ஆயுதம் கிடையாது. ஒரு தெளிவான அறிவோட ரூபம். நம்மோட அறிவு நீளமானதா இருக்கனும், அதே சமயம் விசாலமான சிந்தனை இருக்கனும்,விஷயத்துக்குள்ள போகும் போது கூர்மையா இருக்கனும். அதுதான் வேல்.

நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றன் செயுங் குமரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்கு முன்னே வந்து தோன்றிடினே.
-அருணகிரிநாதர் (கந்தரலங்காரப்பாடல்)

விளக்கம் - குஞ்சலக் குட்டியான முருகனின் குஞ்சித பாதங்களும்,கால்சிலம்பும்,'ஜல் ஜல்' என ஜலஜலக்கும் கால் சதங்கையும்,தண்டையும்,அழகிய ஷண்முகனின் தோள்களும்,கடம்பும் எனக்கு முன்னாடி தெரியும் போது நாள், நக்ஷத்ரம்,கொடிய விதி என்று எதுவுமே எதுவும் பண்ணமுடியாது!னு அருணகிரினாதர் லயிச்சு பாடியிருக்கார்.பலவிதமான கஷ்டங்களையும் வேலால விரட்டி தன்னோட பக்தாளோட வாழ்க்கைல நல்ல மாறுதலை உண்டாக்கி, மனதுக்கு ஆறுதலை தருவார் இந்த ஆறு தலை உம்மாச்சி.
ஷண்முகனோட ஒரு குட்டி ஸ்லோகம் இப்போ பாக்கலாமா??

//ஷண்முகம் ஷட்குணம் சைவ குமாரம் குலபூஷணம்

தேவஸேனாபதிம் வந்தே ஸர்வ கார்யார்த்த ஸித்தயே
//

ஸ்லோகத்தோட அர்த்தம் - ஆறுமுகம் கொண்டவனும், ஆறு நல்ல குணங்களை உடைய எங்கள் குலத்தின் அணிகலனும், தேவஸேனையின் ஆத்துக்காரரும், காரியம் அனைத்திலும் வெற்றி தருபவனும் ஆகிய குமரனை அடி பணிகிறேன்.
(இந்த இடத்துல தேவஸேனையின் ஆத்துக்காரர்னு தான் அர்த்தம் எடுத்துக்கனும், ஏன்னா அவாத்து மாமி பெயரை சொல்லியாச்சுனா எல்லா மாமாவுமே ஒரு பயத்துல நமக்கு சாதகமா நம்ப வேலையை முடிச்சு குடுப்பா இல்லையா அதான்!)

வெற்றிவேல்! வீரவேல்