Thursday, February 10, 2011

சாக்தம்

இந்த உலகம் முழுவதும் காலம்காலமா எல்லோராலயும் பின்பற்றப்பட்டு வரும் ஒரு வழிபாட்டு முறை இந்த சாக்தம். அன்னை வடிவில் பரம்பொருளை ஆராதனை செய்யும் முறைக்கு சாக்தம்னு பகவத்பாதர் அழகான பெயர் தந்தார். அம்மாவை விரும்பாத பிள்ளைகள் இந்த லோகத்துலேயே கிடையாது. அதனால இந்த ஆராதனைக்கு எப்போதும் தனித்துவம் உண்டு.



வாலை குமரியடி கண்ணம்மா!!

ஒரு குழந்தை கைல 6 மிட்டாய் இருக்குன்னு வெச்சுக்கோங்கோ, அதை எல்லாருக்கும் வினியோகம் செய்யரோது கடைசியா ஒரு மிட்டாயை மட்டும் அந்த குட்டி குழந்தை தன்னோட அழகான வாய்ல இரண்டு மூனு தடவை வச்சு ருசி பாத்துட்டு கண்ணத்தில் குழி விழும்படியா ஒரு பொக்கை வாய் சிரிப்பு சிரிச்சா அந்த மிட்டாய் எவ்ளோ மதுரமான ஒரு வஸ்துவா இருக்கனும்? அதை மாதிரி தான் சாக்தமும், பகவத்பாதர் தன்னோட ஆத்மார்த்தமான ஆராதனையா எடுத்துண்டது சாக்தத்தைதான்..:) அதனால தான் அவர் பல உம்மாச்சி ஸ்லோகம் எழுதின அதே வேளையில், அம்பாள் சம்பந்தமா தன்னை மறந்து நிறையா பண்ணி வெச்சுருக்கார்.

அவரோட கற்பனாசக்தி காலை நேர சூரியனாய்,மணக்கும் மல்லிகையாய்,அதில் கிறங்கும் வண்டாய்,பொதிகைமலை தேனாய்,தாமிரபரணி ஊற்றாய்,அதில் எழும் அழகிய காற்றாய்,கார்காலத்து மயிலாய்,அதற்கு இசைக்கும் கருங்குயிலாய்,மாலை நேர இளவெயிலாய் பல வர்ணஜாலம் காட்டியது அம்பாள் மீதான வர்ணனையில் தான் என்பது உலகம் அறிந்த உண்மை.



மலயத்வஜன் பெற்ற பெருவாழ்வு...:)

சாக்த முறையை அதிதீவிரமா கடைபிடிக்கறவாளுக்கு சாக்தர்கள்நு பேர். மாத்ரு பாவம் இவா கிட்ட ரொம்ப ரொம்ப ஜாஸ்தியா இருக்கும். எல்லா வஸ்துவும் இவாளுக்கு அம்பாளாவே தெரியும். அவாளுக்கு கிடைக்கும் எல்லா ஐஸ்வர்யமும் அம்பாள் போட்ட பிச்சை! எனும் எண்ணம் அழியாமல் இருக்கும். ஒரு வசனம் கூட உண்டு //உண்ணும் உணவு,உடுக்கும் உடை,பருகும் நீர்,மெல்லும் வெற்றிலை எல்லாம் அவள் இட்ட பிச்சை//னு பெருமையா சொல்லிப்பா.

இந்த அம்மா இருக்காளே அவளுக்கு தாராளமான மனசு, குழந்தைகள் கேட்டது சாதாரணமான பிற வஸ்துவா இருந்தாலும் அவள் பரவஸ்துவையே சர்வசாதாரணமா "இந்தா கோந்தை! வெச்சுக்கோ சரியாஆஆ!"னு குடுத்து விடும் இளகின மனசு. ஒரு அசட்டுப் பிள்ளை “இங்க கொஞ்சம் பாரேன் அம்மா!னு தொடர்ந்து கேட்டுண்டே இருந்தானாம், ஆனா நம்ப அம்மாவோட காதுல வேற மாதிரி விழுந்து அவள் 14 லோகத்துலையும் கிடைக்கர்த்துக்கு அதிசயமான சாயுஞ்யத்தை குடுத்துட்டாளாம். இதை செளந்தர்யலஹரில ஒரு ஸ்லோகத்துல அழகா சொல்லி இருப்பார் அந்த காலடி மைந்தன். "பவானி த்வம் தாசே!"னு அந்த ஸ்லோகம் ஆரம்பிக்கும்.

பவன் அப்பிடின்னா தலைவன்னு அர்த்தம்,பவனோட ஆத்துக்காரி பவானி. "ஹே பவானி! இந்த தாசனை கொஞ்சம் பாக்கக்கூடாதோடியம்மா!னு நாம கேட்டா அது தயாளமான மனசுடைய அவளோட காதுல "பவானித்வம் தாசே"னு விழுந்து "இந்தா கோந்தை!"னு சர்வசாதாரணமா சர்வலோக சக்கரவர்த்தியா ஆக்கிடுவா. (பவானித்வம் அப்பிடின்னா தலைமைனு ஒரு அர்த்தம் வரும் & நான் நீ எனும் பேதம் அற்ற நீயே நானாகிறேன் எனும் நிலைனும் ஒரு அர்த்தம் வரும்).இதே அர்த்தம் வரும்படியான ஒரு அந்தாதிப் பாடல் நம்ப அபிராமிப்பட்டரோடுது,

//தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே //

அம்பாளோட ஆராதனைல கேரள தேசத்திலையும், நம்ப தமிழ் நாட்டுலையும் இஞ்சிக்கு சிறப்பு இடம் உண்டு. பாசிப்பருப்போடு சேர்ந்து செய்த பொங்கலாகட்டும்,பானகமாகட்டும், நீர்மோராகட்டும் எல்லாத்துலையும் இஞ்சியோட ருசி இருக்கும். இஞ்சி செழுமையாக நல்ல நீர்வளத்தோட இருக்கும் போதும் சரி, நாளாவட்டத்துல காய்ஞ்சு போய் சுருங்கி சுக்கா ஆகும் போது அதோட ருசில எந்த வித்தியாசமும் இருக்காது, அதே போல ஒரு உண்மையான சாதகன் லோகத்தையே பரிபாலனம் பண்ணும் ராஜாவா ஆனாலும் சரி, அடுத்த வேளை சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் நடுத் தெருவில் நின்னாலும் சரி அம்பாளிடம் அவன் கொண்ட திடமான வாத்சல்யம் மாறாம இருக்கனும், அதுதான் உண்மையான சாக்தனுக்கு உரிய லக்ஷணம். அதை உணர்த்தர்துக்கு தான் இஞ்சி அடிக்கடி சேர்க்கப்படுகிறது.



மதி சூடும் எங்கள் காந்திமதி

ஒரு நண்பர் என்கிட்ட சும்மாவாவது வம்புக்கு இழுக்கர்த்துக்காக “ஹே தக்குடு! சும்மா அம்பாள்! அம்பாள்!னு சொல்லிண்டு இருக்கியே! பரமேஸ்வரனுக்கு தாயுமானவர்,அம்மையப்பர்னு எல்லாம் பேர் இருக்கு தெரியுமா? உனக்கு உங்க அம்பாள் என்ன பண்ணுவாளோ அதை ஸ்வாமியே பண்ணிடுவார்"னு சொன்னார், அதுக்கு நான், பாரி வள்ளலை போல் பெரிய வள்ளல்னு சொன்னா அப்போ உண்மைலையே பாரிதானே பெரிய வள்ளல்! அதை மாதிரிதான் நீங்க சொல்லர்தும், தாய்மாதிரி நடிக்க முயற்சி பண்ணும் அவருக்கே இவ்ளோ கருணைனா எங்க அம்பாளுக்கு எவ்ளோ கருணை இருக்கும் & நீங்க சொன்ன அம்மையப்பர்லையும் அம்மை தான் முதல்ல வருதுவோய்! அப்பன் எல்லாம் அப்புறம் தான் வருது!னு சொல்லி முடிச்சேன்...:)

அம்பாளை ஆராதனை பண்ணினா என்ன கிட்டும்?னு கேட்டா அது மழைனால லோகத்துல என்ன எல்லாம் விளையும்?னு கேக்கர்த்துக்கு சமானம். அந்த மாதுளம்பூ நிறத்தாளை மனம் உருகி துதிப்பவர் கண்களில் ஒரு ஒளி இருக்கும், காளிதாஸனை ஒத்த கற்பனை வளம் இருக்கும், எப்போதும் மாறாத குழந்தை மனம் இருக்கும்,லோகம் முழுசையும் தன்னோட சொந்தபந்தமா பாவிக்கக் கூடிய தாயுள்ளம் இருக்கும், தேர்ந்தெடுத்து கிட்டிய ரத்தினம் போன்ற நட்புவட்டம் இருக்கும், இந்த்ராபுரியின் அரசனையும் இல்வாழ்க்கையில் இருக்கும் சாமானியனையும் சமமாக பாவிக்கும் நடு நிலையான மனசு இருக்கும்,இன்னும் சொல்ல முடியாத எல்லா கீர்த்தியும் செல்வமும் சாக்தனின் காலடியில் தவம் இருக்கும்.



கற்பூர நாயகிக்கு கற்பூர ஆரத்தி...:)



ஒரு அம்பாள் உம்மாச்சி ஸ்லோகம் பார்கலாமா இப்போ??..:)

ந ஜானாமி தானம் த சத்யான யோகம்
ந ஜானாமி தந்த்ரம் ந சஸ்தோத்ரமந்த்ரம்
ந ஜானாமி பூஜாம் ந ச ந்யாஸயோகம்
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானீ

ஸ்லோகத்தோட அர்த்தம் - அம்மாடி பவானி! நேக்கு தானம் பண்ணவும் தெரியாது, யோகம் பண்ணவும் தெரியாது, மந்த்ரம் ஸ்தோத்ரம்னு எதுவுமே தெரியாது. உருப்படியா ஒரு பூஜை கூட பண்ண தெரியாதுன்னா பாத்துக்கோயேன். நேக்கு தெரிஞ்சதெல்லாம் நீ மட்டும்தான். நீயே கதி!...;)