Friday, December 31, 2010

ஸ்ரீ வைஷ்ணவம்

//மாதங்களில் நான் மார்கழியாகவும், ருதுக்களில் வசந்த ருதுவாகவும், வ்ருஷங்களில் அரச மரமாகவும்,ஸ்வீட் வகைகளில் திரட்டிப் பாலாகவும் நான் இருக்கிறேன்// - அப்பிடின்னு பெருமாள் சொல்லி இருக்கார். அதனால தானோ என்னவோ அவர் சம்பந்தமான இந்த பதிவு மார்கழி மாசத்துல அமையர்து!..:)இந்த உம்மாச்சி சரியான ஷோக் பேர்விழி! திருமஞ்சனம் ஆச்சா ஆகலையான்னே கண்டு பிடிக்க முடியாது. எப்ப பாத்தாலும் மணக்க மணக்க செண்ட்டை போட்டுண்டு பட்டு வஸ்த்ரம் கட்டிண்டு,கலர் கலரா பூமாலையை போட்டுண்டு இருப்பார்.ஸ்ரீரங்கத்து தேவதையும் அவளோட ஆத்துக்காரரும்...:)

பெருமாள் உம்மாச்சியை முழுமுதற் கடவுளாக ஆராதனை பண்ணும் முறைக்கு ஸ்ரீ வைஷ்ணவம்!னு பேர். மத்த அஞ்சு ஆராதனைக்கும் இல்லாத ஒரு சிறப்பு 'ஸ்ரீ' அடைமொழி இதுக்கு உண்டு. பெருமாள் ஸ்வபாவமாவே ரொம்ப காருண்யமான மூர்த்தி! தங்கமான மனசு அவருக்கு! அப்பிடி எல்லாம் எல்லாரும் சொல்லுவா. சதாசர்வ காலமும் அவரோட ஹ்ருதயகமலத்துல வாசம் செய்யும் மஹாலெக்ஷ்மித் தாயார் தான் அதுக்கு காரணம். வைஷ்ணவத்துல தான் தாயார்! தாயார்!னு கொண்டாடுவா, இல்லைனா நாச்சியார்!னு சொல்லி எஜமானி அம்மாவா ஆகிடுவா.

ஸ்ரீ வைஷ்ணவத்துல தாஸ்ய பாவம் ரொம்ப ரொம்ப ஜாஸ்தின்னே சொல்லலாம். அடியேன்! தாசன்! தாசானுதாசன்,ராமானுஜதாசன் அப்பிடின்னு எல்லாம் தன்னை சொல்லிப்பா. அதே மாதிரி மத்தவாளை கூப்பிடும் போது தேவரீர்! ஸ்வாமி! இந்த மாதிரி ரொம்ப அழகா கூப்பிடுவா.வேடிக்கையா ஒரு வசனம் உண்டு, வைஷ்ணவத்துல இருக்கும் ஒருவர் இன்னொருத்தரை குழிக்குள்ள தள்ளி விடர்தா இருந்தாலும் //தேவரீர், எழரேளா? இல்லைனா தாசன் எழப்பண்ணட்டுமா?//னு அழகா தான் கேப்பாளாம். உண்மையான ஒரு ஸ்ரீ வைஷ்ணவன் தன்னோட ஆச்சாரியனை பார்த்தாக்க அப்பிடியே வெட்டின மரம் மாதிரி நெடுஞ்சான் கிடையா விழுந்து சேவிப்பர்(சேவிக்கனும்!). தாசன் தண்டம்!னு சொல்லுவா, இதுக்கு விஷேஷமான அர்த்தம் உண்டாம், ஆச்சாரியனோட அனுக்கிரஹம் இல்லாத வரைக்கும் அடியேன் ஒன்னுக்கும் உதவாத தண்டம் அப்பிடிங்கர்து அதோட அர்த்தம். தாசன் நமஸ்காரம் பண்ணிக்கறேன்!ங்கர்து இன்னொரு அர்த்தம்.
ஸ்ரீ வைஷ்ணவத்தை பாசுரங்களால வளம் கொழிக்க வெச்சவா ஆழ்வார்கள், அவாள்ல ஒருத்தர் ஒரு தடவை திருப்பதி போய் எல்லாரும் கோவிந்தா! கோபாலா!சொல்லர்தை பாத்துட்டு இங்கையே ஒரு புல்லாக நேக்கு பிறவி கொடு பெருமாளே!னு வேண்டினாராம், அப்புறம் அச்சச்சோ! புல்லுக்கு குறைச்சலான ஆயுசுதானே உண்டு, அதுக்கு பதில் ஸ்வாமி புஷ்கரணில மீனா பொறந்தா உம்மாச்சி ‘ங்கா’ குச்ச ஜலத்துல நாமும் ‘ங்கா’ குச்சலாமேனு ஆசை பட்டு மீனா பொறக்கனும்!னு வேண்டினாராம், திருப்பியும் ஜலம் வத்தி போச்சுனா அங்க இருக்க முடியாதே!னு யோசிச்சுட்டு உம்மாச்சியோட கோவில் வாசல்ல கல்படியா ஆகனும்! கல்படினா அங்கேந்து நகராம சதாசர்வ காலமும் பாலாஜியை பாத்துண்டு இருக்கலாம்னு கடைசியா வேண்டுதலை உறுதி பண்ணினாராம். ராஜபரம்பரைல ஜனனம் பண்ணி பெரிய பெருமாள் பக்தர் ஆன குலசேகராழ்வார்தான் அவர்.

கஜேந்த்ர மோக்ஷ கதை நம்ப எல்லாருக்குமே நன்னா தெரியும், அதுல ஒரு விஷயம் நன்னா கவனிச்சு பாத்துருக்கேளா? முதலை ரூபத்துல வரும் அந்த கந்தர்வன் மஹாகெட்டிக்காரன்னு தான் சொல்லத் தோனர்து, அவனோட சாபம் போகர்துக்கு உம்மாச்சி ஆராதனை பண்ண ஆரம்பிச்சி இருந்தான்னா எத்தனை 1000 வருஷம் ஆகுமே அவனோட சாபம் நிவர்த்தி ஆக, ஆனா கெட்டிக்காரனா பரமபாகவதோத்தமரா இருக்கும் கஜேந்த்ரனோட காலை கெட்டியா கொஞ்ச நேரம் பிடிச்ச ஒடனேயே பெருமாளோட தர்சனம் & அவர் கையாலையே மோக்ஷமும் கிடைச்சுடுத்து.. அதுதான் ஸ்ரீ வைஷ்ணவத்தோட தாச பக்தியோட சிறப்பு. சரணாகதி அடைஞ்சவாளுக்கு பூலோகத்தில் நிதியும் வைகுண்டத்தில் கதியும் உண்டு.கஜேந்த்ராழ்வார்...:)

வைஷ்ணவத்துலையும் பொம்ணாட்டிகளோட வார்த்தைக்கு ரொம்பவே மவுசு ஜாஸ்தி (நான் சொல்லலை, வேளுக்குடியார் சொன்னது). எத்தனையோ ஆழ்வார்கள் இருக்கா, சிரமப்பட்டு லொங்கு லொங்கு!னு எல்லா திவ்யதேசத்துக்கும் போய் ஆயிரக்கணக்குல பாசுர மழை பொழிஞ்சா, ஆனா நெறையா பேருக்கு அவாளோட அற்புதமான க்ரந்தங்களோட பேர் கூட தெரியாது. வில்லிப்புத்தூர்ல ஒரு பொம்ணாட்டி பாவாய்! பாவாய்!னு முப்பதே முப்பது பாசுரம் தான் பாடினா, அதுவும் ஆத்துல இருந்த மேனிக்கே, அவளோட திருப்பாவை தெரியாதவாளே லோகத்துல கிடையாது, கேட்டாக்க பொம்ணாட்டிகளோட பக்திக்கு ஈடு இணை கிடையாது!னு சொல்லிண்டு ஒரு பெரிரிரிய கூட்டமே இங்க கொடி பிடிச்சுண்டு வந்துடுவா....:)

பெருமாளையும் தாயாரையும் எப்போதும் மறக்காம சேவிக்கறவாளுக்கு என்ன கிட்டும்? திருத்துளாவத்தோட மணம் மாதிரி மனசும் புத்தியும் மனம் வீசும், தாஸ்ய பாவம் ஜாஸ்தி ஆக ஆக மனசுல உள்ள அஹங்காரம் எல்லாம் போய் ஸ்படிகம் மாதிரி சிந்தனை பிறக்கும், மன்மதனும் ரதியும் பூலோகத்துல ஜனனம் பண்ணி இருக்காளோ?னு மத்தவா சந்தேகப் படும் படியான வ்யாதி வெக்கை இல்லாத ரூப லாவண்யம் கிட்டும், எத்தனை விருந்தினர் வந்தாலும் சாப்பாடு போடும் படியான தயாள மனசும் அதுக்கு தேவையான தான்யமும் கிட்டும், குபேரனுக்கு பேரனோ!னு வியக்கும் படியான ஸ்ரீநிதி கிட்டும்.கூடாரை வெல்லும் சீர் கோவிந்தன்!!..:)

இப்ப ஒரு உம்மாச்சி ஸ்லோகமும் அதோட அர்த்தமும் பாப்போமா?

//ஆகாசாத் பதிதம் தோயம் யதா கச்சதி சாகரம்

ஸர்வ தேவ நமஸ்காரஹா கேசவம் ப்ரதி கச்சதி
//

அர்த்தம் - ஆகாயத்துலேந்து விழும் அக்கம் எல்லாம் கடோசில சமுத்ரத்தை அடையர மாதிரி, உண்மையான பக்தியோடையும், பவ்யத்தோடையும் நாம பண்ணும் நமஸ்காரம் எல்லாமே கேசவனோட பாதங்களை போய் அடையர்து