Friday, December 31, 2010

ஸ்ரீ வைஷ்ணவம்

//மாதங்களில் நான் மார்கழியாகவும், ருதுக்களில் வசந்த ருதுவாகவும், வ்ருஷங்களில் அரச மரமாகவும்,ஸ்வீட் வகைகளில் திரட்டிப் பாலாகவும் நான் இருக்கிறேன்// - அப்பிடின்னு பெருமாள் சொல்லி இருக்கார். அதனால தானோ என்னவோ அவர் சம்பந்தமான இந்த பதிவு மார்கழி மாசத்துல அமையர்து!..:)இந்த உம்மாச்சி சரியான ஷோக் பேர்விழி! திருமஞ்சனம் ஆச்சா ஆகலையான்னே கண்டு பிடிக்க முடியாது. எப்ப பாத்தாலும் மணக்க மணக்க செண்ட்டை போட்டுண்டு பட்டு வஸ்த்ரம் கட்டிண்டு,கலர் கலரா பூமாலையை போட்டுண்டு இருப்பார்.



ஸ்ரீரங்கத்து தேவதையும் அவளோட ஆத்துக்காரரும்...:)

பெருமாள் உம்மாச்சியை முழுமுதற் கடவுளாக ஆராதனை பண்ணும் முறைக்கு ஸ்ரீ வைஷ்ணவம்!னு பேர். மத்த அஞ்சு ஆராதனைக்கும் இல்லாத ஒரு சிறப்பு 'ஸ்ரீ' அடைமொழி இதுக்கு உண்டு. பெருமாள் ஸ்வபாவமாவே ரொம்ப காருண்யமான மூர்த்தி! தங்கமான மனசு அவருக்கு! அப்பிடி எல்லாம் எல்லாரும் சொல்லுவா. சதாசர்வ காலமும் அவரோட ஹ்ருதயகமலத்துல வாசம் செய்யும் மஹாலெக்ஷ்மித் தாயார் தான் அதுக்கு காரணம். வைஷ்ணவத்துல தான் தாயார்! தாயார்!னு கொண்டாடுவா, இல்லைனா நாச்சியார்!னு சொல்லி எஜமானி அம்மாவா ஆகிடுவா.

ஸ்ரீ வைஷ்ணவத்துல தாஸ்ய பாவம் ரொம்ப ரொம்ப ஜாஸ்தின்னே சொல்லலாம். அடியேன்! தாசன்! தாசானுதாசன்,ராமானுஜதாசன் அப்பிடின்னு எல்லாம் தன்னை சொல்லிப்பா. அதே மாதிரி மத்தவாளை கூப்பிடும் போது தேவரீர்! ஸ்வாமி! இந்த மாதிரி ரொம்ப அழகா கூப்பிடுவா.வேடிக்கையா ஒரு வசனம் உண்டு, வைஷ்ணவத்துல இருக்கும் ஒருவர் இன்னொருத்தரை குழிக்குள்ள தள்ளி விடர்தா இருந்தாலும் //தேவரீர், எழரேளா? இல்லைனா தாசன் எழப்பண்ணட்டுமா?//னு அழகா தான் கேப்பாளாம். உண்மையான ஒரு ஸ்ரீ வைஷ்ணவன் தன்னோட ஆச்சாரியனை பார்த்தாக்க அப்பிடியே வெட்டின மரம் மாதிரி நெடுஞ்சான் கிடையா விழுந்து சேவிப்பர்(சேவிக்கனும்!). தாசன் தண்டம்!னு சொல்லுவா, இதுக்கு விஷேஷமான அர்த்தம் உண்டாம், ஆச்சாரியனோட அனுக்கிரஹம் இல்லாத வரைக்கும் அடியேன் ஒன்னுக்கும் உதவாத தண்டம் அப்பிடிங்கர்து அதோட அர்த்தம். தாசன் நமஸ்காரம் பண்ணிக்கறேன்!ங்கர்து இன்னொரு அர்த்தம்.




ஸ்ரீ வைஷ்ணவத்தை பாசுரங்களால வளம் கொழிக்க வெச்சவா ஆழ்வார்கள், அவாள்ல ஒருத்தர் ஒரு தடவை திருப்பதி போய் எல்லாரும் கோவிந்தா! கோபாலா!சொல்லர்தை பாத்துட்டு இங்கையே ஒரு புல்லாக நேக்கு பிறவி கொடு பெருமாளே!னு வேண்டினாராம், அப்புறம் அச்சச்சோ! புல்லுக்கு குறைச்சலான ஆயுசுதானே உண்டு, அதுக்கு பதில் ஸ்வாமி புஷ்கரணில மீனா பொறந்தா உம்மாச்சி ‘ங்கா’ குச்ச ஜலத்துல நாமும் ‘ங்கா’ குச்சலாமேனு ஆசை பட்டு மீனா பொறக்கனும்!னு வேண்டினாராம், திருப்பியும் ஜலம் வத்தி போச்சுனா அங்க இருக்க முடியாதே!னு யோசிச்சுட்டு உம்மாச்சியோட கோவில் வாசல்ல கல்படியா ஆகனும்! கல்படினா அங்கேந்து நகராம சதாசர்வ காலமும் பாலாஜியை பாத்துண்டு இருக்கலாம்னு கடைசியா வேண்டுதலை உறுதி பண்ணினாராம். ராஜபரம்பரைல ஜனனம் பண்ணி பெரிய பெருமாள் பக்தர் ஆன குலசேகராழ்வார்தான் அவர்.

கஜேந்த்ர மோக்ஷ கதை நம்ப எல்லாருக்குமே நன்னா தெரியும், அதுல ஒரு விஷயம் நன்னா கவனிச்சு பாத்துருக்கேளா? முதலை ரூபத்துல வரும் அந்த கந்தர்வன் மஹாகெட்டிக்காரன்னு தான் சொல்லத் தோனர்து, அவனோட சாபம் போகர்துக்கு உம்மாச்சி ஆராதனை பண்ண ஆரம்பிச்சி இருந்தான்னா எத்தனை 1000 வருஷம் ஆகுமே அவனோட சாபம் நிவர்த்தி ஆக, ஆனா கெட்டிக்காரனா பரமபாகவதோத்தமரா இருக்கும் கஜேந்த்ரனோட காலை கெட்டியா கொஞ்ச நேரம் பிடிச்ச ஒடனேயே பெருமாளோட தர்சனம் & அவர் கையாலையே மோக்ஷமும் கிடைச்சுடுத்து.. அதுதான் ஸ்ரீ வைஷ்ணவத்தோட தாச பக்தியோட சிறப்பு. சரணாகதி அடைஞ்சவாளுக்கு பூலோகத்தில் நிதியும் வைகுண்டத்தில் கதியும் உண்டு.



கஜேந்த்ராழ்வார்...:)

வைஷ்ணவத்துலையும் பொம்ணாட்டிகளோட வார்த்தைக்கு ரொம்பவே மவுசு ஜாஸ்தி (நான் சொல்லலை, வேளுக்குடியார் சொன்னது). எத்தனையோ ஆழ்வார்கள் இருக்கா, சிரமப்பட்டு லொங்கு லொங்கு!னு எல்லா திவ்யதேசத்துக்கும் போய் ஆயிரக்கணக்குல பாசுர மழை பொழிஞ்சா, ஆனா நெறையா பேருக்கு அவாளோட அற்புதமான க்ரந்தங்களோட பேர் கூட தெரியாது. வில்லிப்புத்தூர்ல ஒரு பொம்ணாட்டி பாவாய்! பாவாய்!னு முப்பதே முப்பது பாசுரம் தான் பாடினா, அதுவும் ஆத்துல இருந்த மேனிக்கே, அவளோட திருப்பாவை தெரியாதவாளே லோகத்துல கிடையாது, கேட்டாக்க பொம்ணாட்டிகளோட பக்திக்கு ஈடு இணை கிடையாது!னு சொல்லிண்டு ஒரு பெரிரிரிய கூட்டமே இங்க கொடி பிடிச்சுண்டு வந்துடுவா....:)

பெருமாளையும் தாயாரையும் எப்போதும் மறக்காம சேவிக்கறவாளுக்கு என்ன கிட்டும்? திருத்துளாவத்தோட மணம் மாதிரி மனசும் புத்தியும் மனம் வீசும், தாஸ்ய பாவம் ஜாஸ்தி ஆக ஆக மனசுல உள்ள அஹங்காரம் எல்லாம் போய் ஸ்படிகம் மாதிரி சிந்தனை பிறக்கும், மன்மதனும் ரதியும் பூலோகத்துல ஜனனம் பண்ணி இருக்காளோ?னு மத்தவா சந்தேகப் படும் படியான வ்யாதி வெக்கை இல்லாத ரூப லாவண்யம் கிட்டும், எத்தனை விருந்தினர் வந்தாலும் சாப்பாடு போடும் படியான தயாள மனசும் அதுக்கு தேவையான தான்யமும் கிட்டும், குபேரனுக்கு பேரனோ!னு வியக்கும் படியான ஸ்ரீநிதி கிட்டும்.



கூடாரை வெல்லும் சீர் கோவிந்தன்!!..:)

இப்ப ஒரு உம்மாச்சி ஸ்லோகமும் அதோட அர்த்தமும் பாப்போமா?

//ஆகாசாத் பதிதம் தோயம் யதா கச்சதி சாகரம்

ஸர்வ தேவ நமஸ்காரஹா கேசவம் ப்ரதி கச்சதி
//

அர்த்தம் - ஆகாயத்துலேந்து விழும் அக்கம் எல்லாம் கடோசில சமுத்ரத்தை அடையர மாதிரி, உண்மையான பக்தியோடையும், பவ்யத்தோடையும் நாம பண்ணும் நமஸ்காரம் எல்லாமே கேசவனோட பாதங்களை போய் அடையர்து

Saturday, November 27, 2010

சைவம்

ரொம்ப நாள் ஆச்சு உம்மாச்சி போஸ்ட் போட்டு, இன்னிக்கி ஒரு உம்மாச்சி போஸ்ட் பாக்கலாமா எல்லாரும். சிவன் உம்மாச்சியை முழுமுதற் கடவுளா ஆராதனை பண்ணும் முறைக்கு சைவம்னு சங்கரர் உம்மாச்சி பெயர் வெச்சார். விளையாடிப் பாக்கர்துல இந்த உம்மாச்சிக்கு அவ்ளோ சந்தோஷம் உண்டாம். கடைசில பக்தன் கேட்டதை எல்லாம் கைல குடுத்துட்டு வரும் அளவுக்கு தயானிதியாகவும் இந்த உம்மாச்சி இருக்கார். சைவத்தை விருக்ஷமா வளர வெச்ச நால்வர்ல ஒருவரான திருனாவுக்கரசரை ஒரு சமயம் ஒரு ராஜா சமண மதத்துக்கு மாறியே ஆகனும்னு வற்புறுத்தினானாம். இவர் அதுக்கு ஒத்துக்கவே இல்லையாம். உடனே நனா கொதிக்கர சுண்ணாம்பு கலவாய்க்குள்ள அவரை இறக்குனு இரக்கமே இல்லாம சொல்லிட்டானாம் அந்த ராஜா.



தக்குடுவோட உம்மாச்சி!!..:)

நாமா இருந்தா அய்யோ! அம்மா!னு கத்தி இருப்போம் இல்லையா? ஆனா திருனாவுக்கரசர் அழகான ஸ்ருதியோட பதிகம் பாட ஆரம்பிச்சாராம். அதுவும் அவர் பாடின பதிகத்தோட அர்த்தத்தை பாத்தோம்னா இன்னும் ஆச்சர்யமா இருக்கும்.

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே.

பொருள் - லோகத்துக்கே அப்பா மாதிரி இருக்கும் சிவன் உம்மாச்சியோட நிழல்ல நான் இருக்கும் போது எனக்கு சுருதி குத்தம் இல்லாத வீணை நாதமும், அழகான சாயங்கால சமயம் வரும் நிலாவோட குளிர்ச்சியும், ஜிலுஜிலுனு காத்தும்,குளிச்சியான பூவை 'ஒய்ய்ய்ங்' வட்டம் அடிக்கும் வண்டுகளோட சத்தம் இதெல்லாம் இப்போ நான் அனுபவிக்கர மாதிரி இருக்கே!னு சந்தோஷமான முகத்தோட பாடினாராம் அந்த மஹான். அவர் சொன்ன மாதிரியே அவரோட உடம்புக்கு கொதிக்கும் சுண்ணாம்பால 'உவ்வா' எதுவுமே வரலையாம்.

கொதிக்கும் கலனில் அமர்ந்து குதிக்கும் பாதங்களை துதிக்கும் அவர் பாடல்களை உதிக்கும் வேளையில் தியானம் செய்வர் பலர்.




ஒரு சமயம் அசுர சிற்பி மயன் கர்மசிரத்தையா ஒரு நந்தி விக்ரஹம் செதுக்கிண்டு இருந்தாராம். பல வருஷமா செதுக்கிண்டே இருந்தாராம். சில சமயம் மம்மு சாப்டர்தை கூட மறந்தே போய்ட்டாராம். பல வருஷத்துக்கு அப்புறம் அந்த நந்தி விக்ரஹம் செஞ்சு முடிச்சு கடைசியா அந்த விக்ரஹத்துக்கு கண் திறந்தாராம். சில்பசாஸ்த்ர விதிபடி எந்த வித பின்னமும் இல்லாம, கர்ம ச்ரத்தையோட, அன்னாஅகாரம் இல்லாம செய்யப்பட்ட ஒரு விக்ரஹத்துக்கு கண் திறக்கும் போது ஜீவன் வந்துடுமாம். அதே மாதிரி மயன் பண்ணின இந்த நந்திக்கும் ஜீவன் வந்து எழுந்துடுத்தான்.

ஓஓஓ!!! இப்ப என்ன பண்ணனு தெரியலையே!!னு திகைச்சு போன மயன் டபக்குனு கைல இருந்த உளியை வெச்சு நந்தியோட முதுகுல ஒரு கோடு போட்டாராம். உடனே அது அந்த கோலத்துலையே மறுபடியும் சிலை ஆயிடுத்தாம்.அந்த நந்தி இருக்கும் இடம் திருனெல்வேலி ஜில்லால ஆழ்வார்குறிச்சிக்கு பக்கத்துல கடனா நதிக்கரைல இருக்கும் சிவசைல நாதர் கோவில். சிவசைலனாதராத்து மாமியோட பேர் பரமகல்யாணி அம்பாள்.



சிவசைலபதி


சிவன் உம்மாச்சி ஆதி காலத்துலையே தன்னோட சரீரத்துல பாதியை அவராத்து மாமிக்கு குடுத்த பெண்ணியவாதி. அதே மாதிரி ஆத்துக்காரியை தலைல தூக்கி வெச்சுண்டு ஆடர பழக்கத்தை லோகத்துக்கு காட்டி குடுத்தவரும் இவர் தான்...;)

சங்கரர் உம்மாச்சி ஸ்தாபனம் பண்ணின ஆம்னாய பீடங்கள் எல்லாத்துலையும் உம்மாச்சியோட பேர் மட்டும் எப்போதுமே சந்த்ரமெளலிஸ்வரன் தான். அம்பாளோட பேர்தான் வித்தியாசப்படும். சங்கரன்.சந்த்ரசேகரன்,சம்பு,உமாபதி,சிவகாமினாதன், நீலகண்டன் இந்த மாதிரி பல நாமதேயங்கள் இந்த உம்மாச்சிக்கு.


இந்த சிவன் உம்மாச்சியை ஆராதனை பண்ணினா என்ன கிட்டும்? ஒரு இடத்துலயே நிலை கொள்ளாம தையா! தக்கா!னு இவர் ஆடிண்டே இருந்தாலும், இவரை ஸ்படிகம் மாதிரியான சுத்தமான மனசோட த்யானம் பண்ணினா அவாளுக்கு மனசை அடக்கும் சக்தி கிட்டும். பசி தாகம் இந்த மாதிரியான சரிர உபாதைகள்னால எல்லாம் அவாளோட மன உறுதியை தளர்த்த முடியாது. ஜோதிஸ்வரூபனா த்யானம் பண்றவாளோட கண்கள் இரண்டும் ஜோதி மாதிரி மின்னும். கைல இருக்கும் எதையும் பற்றுதல் இல்லாமல் அள்ளிக்குடுத்து அதுல சந்தோஷம் அடையக் கூடிய தயாளமான மனசு இவாளுக்கு இருக்கும். சிவன் உம்மாச்சி அவரே ‘அடியார்க்கும் அடியேன்!’னு சொன்னதால அவரோட பக்தாளுக்கும் அந்த பணிவான பாவம்(Baavam) மனசுல எப்போதும் இருக்கும்/இருக்கனும்.



தக்குடுவின் அலங்காரத்தில்...:)

இப்பொ ஒரு குட்டி ஸ்லோகம் பாக்கலாமா?

//வஜ்ர தம்ஷ்ட்ரம் த்ரினயனம் கால கண்ட மரிந்தமம்
ஸஹஸ்ரகர மத்யுக்ரம் வந்தே சம்புமுமாபதிம்
//.

(அர்த்தம் - வஜ்ரம் மாதிரியான உடலையும், மூன்று கண்களையும், காலனை கண்டத்தில் மரித்தவனும்,உக்ரமான ஆயிரம் கைகளை உடையவனும் ஆன உமாபதியை வணங்குகிறேன்.)

Friday, October 15, 2010

கெளமாரம்

அனைவருக்கும் தக்குடுவின் நவராத்திரி நல்வாழ்த்துக்கள்

எல்லாரும் உம்மாச்சியோட அருளால செளக்கியம்னு தக்குடு நம்பர்து. இன்னிக்கி கெளமாரம் பத்தி கொஞ்சம் பார்க்க போறோம். முருகனை பிரதான ஆராதனா மூர்த்தியாக வழிபடும் முறைக்கு கெளமாரம்நு சங்கரர் உம்மாச்சி பேர் வச்சார். முருகு=அழகு அதனால முருகன்னு சொன்னாலே அழகன்னு அர்த்தம். கந்தன்,கடம்பன்,கார்த்திகேயன்,குஹன்,ஷண்முகன் அப்படின்னு இந்த உம்மாச்சிக்கு பல நாமதேயங்கள். உமாபதி,லெக்ஷ்மீபதி,மதுரையம்பதி மாதிரி இவருக்கு தேவஸேனாபதினு ஒரு பேர் உண்டு. இந்த பேருக்கு 2 அர்த்தம் உண்டு. தேவஸேனா பதி!னு பிரிச்சா தேவஸேனையோட ஆத்துக்காரர்னு ஒரு அர்த்தம் வரும். அதே சமயம் தேவ ஸேனாபதினு பிரிச்சா தேவர்களின் படைத் தலைவன்னு ஒரு அர்த்தம் வரும்.




தமிழ் கடவுள் அப்பிடின்னு சொன்னாலே அது முருகன் தான். வேற எந்த உம்மாச்சிக்கும் அந்த சிறப்பு பெயர் கிடையாது. இந்த அழகனோட 6 முக்கியமான கோவில்கள்ல திருச்செந்தூர் ஒரு முக்கியமான ஷேத்ரம். சூரபத்மனை வதம் பண்ணாம தன்னோட சேவல் கொடியாவும், மயிலாவும் ஏத்துண்ட அற்புதமான ஒரு இடம். இங்க உள்ள உம்மாச்சி வெற்றி வடிவேலனா காட்சி குடுக்கர்துனால இவருக்கு 'ஜெயந்தி நாதர்'னு ஒரு அழகான பேர் உண்டு.
ஒரு தடவை சங்கரர் உம்மாச்சி தென் திசைல இருக்கும் உம்மாச்சி கோவிலுக்கு எல்லாம் போய் அங்க உள்ள உம்மாச்சி பத்தி குட்டி குட்டி ஸ்லோகம் எல்லாம் சொல்லிண்டு வந்துண்டு இருந்தார். திருசெந்தூர் வந்த அவருக்கு தாங்க முடியாத தொப்பை வலி வந்துதாம், அவரும் என்னலாமோ மாத்திரை மருந்து எல்லாம் முழுங்கி பார்த்தாராம். தொப்பை வலி போகவே இல்லையாம். ஓஓஒ! என்ன பண்ணர்துன்னே தெரியலையே முருகா!னு ரொம்ப வருத்தப்பட்டாராம். அப்போ அங்க வந்த ஒரு கோவில் மாமா இவருக்கு விவிடி(விபூதி)யை ஒரு குட்டியூண்டு பன்னீர் இலைல வெச்சு குடுத்துட்டு டஷ்ஷ்ஷ்ஷ்!னு மறைஞ்ச்சு போய்ட்டாராம்.




சங்கரர் உம்மாச்சி அந்த விவிடியை நெத்தில இட்டுண்டு கொஞ்சம் தொப்பைலையும் தடவிண்டாராம். உடனே, ‘தொப்பை வலி போயிந்தே! போயே போச்சு!’னு சந்தோஷமா சொல்லற அளவுக்கு தொப்பை வலி போயே போய்டுத்தாம். உடனே சந்தோஷத்தோட அவர் சொன்ன உம்மாச்சி ஸ்லோகம் தான் 'சுப்ரமண்ய புஜங்கம்'. மேலும் இந்த பன்னீர் இலை விபூதியை யாரெல்லாம் முழு நம்பிக்கையோட இட்டுக்கராளோ அவாளுக்கு எல்லா விதமான வியாதியும் குணமாகும்!னு எல்லாருக்கும் சொன்னாராம். புஜங்கம் அப்படின்னா அந்த ஸ்லோகம் ஒரு பாம்பு வளைஞ்சு வளைஞ்சு போகர மாதிரி அமைப்புல இருக்கும். முருகர் உம்மாச்சியை எதுக்கு புஜங்க வழில பாடினார்னா, முருகன் பாம்பு ரூபம், கேரளா கர்னாடகால எல்லாம் இந்த உம்மாச்சியை ஸர்ப ரூபமாத்தான் ஆராதனை பண்ணுவா. வடக்க குமாரஸ்வாமி,கார்த்திக்,கார்த்திகேயாநு எல்லாம் ஆசையா அழைப்பா இந்த உம்மாச்சியை.




இந்த உம்மாச்சியை ஆராதனை பண்ணினா என்னவெல்லாம் கிட்டும்னு பார்த்தோம்னா, முருக பக்தாளுக்கு எப்போதுமே ஒரு இளமையான தோற்றம் இருக்குமாம், சஷ்டி கவசத்துல கூட "எந்த நாளும் ஈரெட்டாய் வாழ்வார்" ஒரு வரில வரும். சுப்ரமணியர் நவகிரகங்கள்ல செவ்வாயோட கிரக தேவதை. அதனாலதான் செந்தூரான்!னு ஒரு பேர் இவருக்கு. முருகனடிமைகள் எந்த காரியம் பண்ணினாலும் ஒரு சுறுசுறுப்போடையும்,ஆக்ரோஷத்தோடையும் பண்ணுவா, அதெல்லாம் செவ்வாய் கிரகத்தோட குணாதியசங்கள். ரூபத்துல மட்டும் இல்லாம புத்தியும் இவாளுக்கு எப்போதுமே ரொம்ப இளமையா இருக்கும். முருகனோட வேல் மாதிரி இவாளோட புத்தியும் ரொம்ப கூர்மையா இருக்கும். அசாத்தியமான தைரியம் இவாளோட மனசுல இருக்கும். இவ்ளோ இருந்தாலும் நான் ஒரு முருகனடிமை!னு தன்னை அடிமையாக்கிண்டு தன்னடக்கத்தோட இருப்பார்கள். அவாளுக்கு என்ன பிரச்சனைனாலும் //முருகன் அருள் முன் நிற்கும்//னு நெஞ்சை நிமிர்த்தி தைரியமாக இருப்பார்கள். அம்பாளை ப்ரதானமா ஆராதனை பண்ணக் கூடிய சாக்தர்கள் முருகனோட வேல் வழிபாட்டை விரும்புவார்கள். ஏன்னா, வேல் சக்தியோட இன்னொரு ஸ்வரூபம். வேல் வெறும் ஆயுதம் கிடையாது. ஒரு தெளிவான அறிவோட ரூபம். நம்மோட அறிவு நீளமானதா இருக்கனும், அதே சமயம் விசாலமான சிந்தனை இருக்கனும்,விஷயத்துக்குள்ள போகும் போது கூர்மையா இருக்கனும். அதுதான் வேல்.

நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றன் செயுங் குமரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்கு முன்னே வந்து தோன்றிடினே.
-அருணகிரிநாதர் (கந்தரலங்காரப்பாடல்)

விளக்கம் - குஞ்சலக் குட்டியான முருகனின் குஞ்சித பாதங்களும்,கால்சிலம்பும்,'ஜல் ஜல்' என ஜலஜலக்கும் கால் சதங்கையும்,தண்டையும்,அழகிய ஷண்முகனின் தோள்களும்,கடம்பும் எனக்கு முன்னாடி தெரியும் போது நாள், நக்ஷத்ரம்,கொடிய விதி என்று எதுவுமே எதுவும் பண்ணமுடியாது!னு அருணகிரினாதர் லயிச்சு பாடியிருக்கார்.



பலவிதமான கஷ்டங்களையும் வேலால விரட்டி தன்னோட பக்தாளோட வாழ்க்கைல நல்ல மாறுதலை உண்டாக்கி, மனதுக்கு ஆறுதலை தருவார் இந்த ஆறு தலை உம்மாச்சி.
ஷண்முகனோட ஒரு குட்டி ஸ்லோகம் இப்போ பாக்கலாமா??

//ஷண்முகம் ஷட்குணம் சைவ குமாரம் குலபூஷணம்

தேவஸேனாபதிம் வந்தே ஸர்வ கார்யார்த்த ஸித்தயே
//

ஸ்லோகத்தோட அர்த்தம் - ஆறுமுகம் கொண்டவனும், ஆறு நல்ல குணங்களை உடைய எங்கள் குலத்தின் அணிகலனும், தேவஸேனையின் ஆத்துக்காரரும், காரியம் அனைத்திலும் வெற்றி தருபவனும் ஆகிய குமரனை அடி பணிகிறேன்.
(இந்த இடத்துல தேவஸேனையின் ஆத்துக்காரர்னு தான் அர்த்தம் எடுத்துக்கனும், ஏன்னா அவாத்து மாமி பெயரை சொல்லியாச்சுனா எல்லா மாமாவுமே ஒரு பயத்துல நமக்கு சாதகமா நம்ப வேலையை முடிச்சு குடுப்பா இல்லையா அதான்!)

வெற்றிவேல்! வீரவேல்

Friday, September 24, 2010

காணாபத்யம்

பிள்ளையார் உம்மாச்சியை அதிதீவிரமாக ஆராதனை செய்யும் சம்ப்ரதாயத்துக்கு காணாபத்யம்னு ஆதிசங்கரர் பெயர் வெச்சார். கணாபத்யம்நும் சொல்லலாம். கணாபத்யம் = கணம் + அதிபத்யம் . எல்லா கணங்களுக்கும் அதிபதி. கணபதி உம்மாச்சியோட சான்னித்யம் க(Ga) அப்படிங்கர அக்ஷரத்துல ஸ்திரமா உண்டு. அதனால 'காணா'ங்கர அக்ஷரத்துக்கு அதிபதி = காணாபத்யம். அதனால தான் தொப்பையப்பருக்கு முழுசும் ககார சப்தத்திலேயே ஆரம்பிக்கர மாதிரியான ‘ககார’ ஸஹஸ்ர நாமம் ரொம்ப விஷேஷமானது.



(எட்டு வருஷமா தக்குடு பூஜை பண்ணின உம்மாச்சி)

எல்லாருக்குமே பிடிச்ச ஒரு உம்மாச்சி இந்த கணபதி. காரணம் என்னனா, இவர் ரொம்ப எளிமையாவர். ரயில்வே ஸ்டேஷன்ல ‘ரயில்வே வினாயகர்!’ங்கர பேர்லையும், பஜார்ல ‘பஜார் வினாயகர்!’ங்கர பேர்லையும், சிவகாசில ‘பட்டாசு வினாயகர்!’ங்கர பேர்லயும் எல்லா இடத்துலையும் உக்காசுண்டு இருப்பார். சின்னக் கொழந்தேளுக்கு எல்லாம் பிடிச்ச மாதிரி யானை முகம் இவருக்கு, சும்மா ஆத்தங்கரை ஓரத்துல வளரும் எருக்கம் பூ, அருகம் புல் போட்டாலே இவருக்கு போதும். சின்னக் குழந்தையாட்டமா அவல்,கடலை,கல்கண்டு,பொரி இதை குடுத்தாலே சந்தோஷப்படக் கூடிய ஒரு குட்டிக் குழந்தை.

கணபதி உபாசனைல ஒளவையார் பாட்டி ரொம்ப முக்கியமானவானு சொல்லலாம். நித்யம் கணபதி உம்மாச்சி பூஜை பண்ணாம அந்த பாட்டி மம்மு சாப்ட மாட்டாளாம். பூஜையும் சும்மா சாதாரணமா எல்லாம் இருக்காது. நன்னா அழகா பூஜா விதானப்படி பண்ணுவாளாம். பூஜைல உக்காசுண்டாச்சுன்னா வேற எதை பத்தியும் யோசிக்கமாட்டாளாம். நம்பாத்துல கல்யாணம் ஆகி பத்து வருஷம் கழிச்சு ஒரு கோந்தை பொறந்ததுன்னா அந்த அம்மா எவ்ளோ பாசத்தோட அதை பாத்துப்பா, அதை மாதிரி இந்த பாட்டியும் மெய்மறந்து பூஜை பண்ணுவாளாம். பாட்டியோட பூஜையோட விஷேஷமே உம்மாச்சிக்கு நிவேத்யம் பண்ணும்போதுதான். கோக்கட்டை,அவல்,பொரி,அப்பம் எல்லாம் வெச்சு நிவேத்யேம் பண்ணும் போது ‘டஷ்ஷ்ஷ்ஷ்!’னு பிள்ளையார் உம்மாச்சி பிரசன்னமாகி பக்கத்துலையே உக்காசுண்டு கையை நீட்டி நீட்டி வாங்கி சாப்டுவாராம்.

ஒரு நாளைக்கு ஒளவையார், பிள்ளையார் உம்மாச்சி பூஜை பண்ணிண்டு இருக்கும் போது ரிஷிகள்,சித்தர்கள் எல்லாரும் நடையும் ஓட்டமுமா போய்ண்டு இருந்தாளாம். ஒளவையார் அதை எல்லாம் கவனிக்கவே இல்லை. ஒரு ரிஷி மட்டும் சும்மா இருக்காம, ‘என்ன ஒளவை!! கைலாசத்துக்கு நீ இன்னும் கிளம்பலையா? பரமேஷ்வரனோட ஆனந்த நடன தரிசனம் நோக்கு வேண்டாமா?’னு கேட்டாராம். அவர் கேட்டதுக்கு அப்பரம் தான் ஒளவைக்கு ஞாபகமே வந்ததாம். ‘நீங்க போய்ட்டு வாங்கோ! நான் இப்பதான் பூஜையே ஆரம்பிச்சுருக்கேன். இன்னும் அந்த புள்ளை வேற சாப்ட வரனும், அவன் மெதுவாதான் சாப்டுவான் பாவம், அவசரபடுத்தினா அவனோட தொண்டைல போய் மோதகம் அடச்சுக்கும்!’னு சொல்லிட்டு பூஜையை தொடர்ந்து பண்ணினாளாம்.



(கணபதி யந்திரம்)

சொன்னாளே தவிர மனசுக்குள்ள சிவன் உம்மாச்சியோட அபூர்வமான நடனத்தை பாக்கனும் ரொம்ப ஆசையா இருந்ததாம். ஆனா அதுக்காக பூஜையை ஓட்டித்தள்ளாம வழக்கம் போல நிதானமாவே பண்ணினாளாம். நிவேத்யம் பண்ணர்துக்கு ‘டிங்!டிங்!டிங்!’னு மணி அடிச்ச உடனே தொப்பையப்பர் ‘இதோ வந்துட்ட்ட்டேன்!’னு சொல்லிண்டே தும்பிக்கையை ஆட்டிண்டு வந்துட்டாராம். கோக்கட்டை,அப்பம்,அவல்,பொரி,கடலை சுண்டல் எல்லாம் நன்னா திவ்யமா சாப்டுட்டு கைல இருந்த மிச்சத்தை (நாம நம்ப அம்மா புடவைல தொடைக்கர மாதிரி) அவர் ஒளவையோட முந்தானைல தொடச்சாராம். ‘ஏஏஏஏஏப்ப்ப்!’னு ஒரு ஏப்பத்தையும் விட்டுட்டு, (மெதுவா அவரோட தொப்பையை தடவிண்டே) என்ன ஒளவை! நீ எங்கப்பாவோட டான்ஸ் பாக்கர்த்துக்கு போகலையா?னு கேட்டாராம். நோக்கென்னடாப்பா! சுகமா சாப்பாட்டாச்சு, நினைச்ச மாத்ரத்துல கைலாசமும் போய்டுவாய், நான் இனிமே கிளம்பி போய் சேரர்துக்குள்ள அங்க எல்லாம் முடிஞ்சுடும், நீ சப்ப்ளாம் போட்டு உக்காசுண்டு என்னோட கையால வாங்கி சாப்ட அழகை பாத்ததே நேக்கு போதும்!னு பாட்டி சொன்னாளாம். தும்பிக்கையாள்வார் உடனே, ‘பாட்டி! என்னோட தும்பிக்கையை நன்னா கெட்டியா பிடிச்சுண்டு கண்ணை இறுக்கி மூடிக்கோ!’னு சொன்னாராம். அடுத்த நிமிஷம் பாட்டி கண்ணை திறந்து பாத்தா கைலாசத்துல முதல் வரிசைல முதல் ஆளா உக்காசுண்டு இருந்தாளாம். ‘பாட்டி! இது என்னோட சீட்டு, உன்னை யாரும் எழுப்ப முடியாது. நன்னா எங்கப்பாவோட டான்ஸ்ஸை பாத்துட்டு வா!’னு குழந்தை சிரிப்போட பிள்ளையார் உம்மாச்சி சொன்னாராம்.

அந்த சந்தோஷத்துல மடை திறந்த வெள்ளம் மாதிரி ஒளவையார் பாடினதுதான் 'வினாயகர் அகவல்'. உண்மையான அன்போட யாரு வினாயகர் அகவல் சொன்னாலும் தொப்பையப்பருக்கு பழைய ஞாபகம் வந்து சொன்னவாளை எல்லா விதத்துலையும் உயரமான ஸ்தானத்துக்கு தும்பிக்கையால தூக்கிவிட்டுடுவாராம்.

தும்பிக்கை மேல சஞ்சலம் இல்லாத நம்பிக்கை இருந்ததுன்னா, அவாளை தொப்பையப்பர் ஒரு நாளும் கை விட மாட்டார். தொப்பையப்பர், குழந்தை மாதிரி மனசையும், உறுதியான நல்ல வைராக்கியமான எண்ணங்களையும், விடாமுயற்சியையும் நமக்கு தரட்டும்!னு ப்ரார்த்தனை பண்ணிப்போம்.

ஒரு உம்மாச்சி ஸ்லோகம் பாக்கலாமா இப்போ?



சிவதனயவரிஷ்டம் ஸகலகல்யாணமூர்த்திம் பரசு கமலஹஸ்தம் மூஷிகம் மோதகேன

அருணகுசுமமாலா வ்யாளலம்போதரம்தம் மம ஹ்ருதயனிவாசம் ஸ்ரீகணேசம் நமாமி
!

அர்த்தம் - சிவனோட அன்பான புள்ளையும், எல்லாவிதமான செளபாக்கியகுணமும் பொருந்திய, தாமரை,பரசு,மோதகத்தை கையில் தாங்கும் மூஷிக வாஹனனும், சூரியனை போன்ற சிவப்பானதும், வாசனை மிக்கதுமான மாலையை அணிந்தவனும்,அழகான தொங்கிய உலகம் போன்ற பெரிய வயிற்றை உடையவனும், எனது இதயகமலத்தில் நீங்காது நித்தியம் வாசம்செய்யும் கணேசனை வணங்குகிறேன்

Thursday, July 22, 2010

ஷட்தர்சனம்/ ஆறு ரூபம்

எல்லாரும் வந்தாச்சா? ஆரம்பிக்கலாமா? ஹம்ம், தொப்பையப்பர் & குரு உம்மாச்சி எல்லாரையும் ப்ரார்த்தனை பண்ணியாச்சு, இனிமே கொஞ்சம் மேல பாக்கலாமா.

நம்பாத்துல (தக்குடு மாதிரி) ஒரு சமத்தான கோந்தை இருக்கு, ஆனா அது அவ்ளோ இஷ்டமா எல்லார்டையும் போகமாடேங்கர்து. பெரியப்பாட்ட பேச கூட மாடேங்கர்து, ஆனா சித்தப்பாட்டா நன்னா சிரிச்சு பேசர்து, அதோட மாமாட்டையும் நன்னா ஒட்டிக்கர்து. சரி போ! எப்பிடியோ நம்பாத்து மனுஷாட்ட கொழந்தை வாத்ஸல்யமா இருக்கே!னு அம்மா, தாத்தா, பாட்டி எல்லாரும் திருப்தி பட்டுப்பா. அதை மாதிரிதான் உம்மாச்சி விஷயமும், எல்லாருக்கும் எல்லா உம்மாச்சி கிட்டயும் மனசு லயிக்கர்து இல்லை. அதுக்கு அர்த்தம் அவாளை பிடிக்காதுன்னு எல்லாம் இல்லை, ஆனா இந்த உம்மாச்சிட்ட ஒரு இஷ்டம் உண்டு அவ்ளோதான்.

எப்படி சித்தப்பா பெரியப்பா எல்லாரும் வேற வேற மாதிரி தோனினாலும், அவா எல்லாருக்கும் நம்ப தாத்தாதான் அப்பாவோ, அதே மாதிரி எல்லா உம்மாச்சியும் ஒன்னுதான், ரூபம் தான் வேற வேற.

எதாவது ஒரு ரூபத்லையாவது கோழந்தேள் ப்ரியம் பண்ணமாட்டாளா?ங்கர நல்ல எண்ணத்துல தான் ஆதிசங்கர் உம்மாச்சி ஆறு விதமா உம்மாச்சி ஆராதனையை நமக்காக ஏற்படுத்தி தந்தார்.அதைதான் 'ஷட்தர்சனம்'னு சொல்லுவா (ஷண்மதம்னு சொல்லும் பழக்கமும் உண்டு, ஆனால் தக்ஷிணாம்னாய பீடத்தோட ப்ருதாவளியில் 'ஷட்தர்சன ஸ்தாபனாசார்ய'னு வார்த்தை ப்ரயோகம் இருக்கர்துனால அடியேனும் அதையே உபயோகிக்கிறேன்).

சங்கரர் குட்டியூண்டு பையனா காலடில இருந்த போது ஒரு நாள் பிக்ஷை எடுக்கப் போனாராம். அன்னிக்கி நல்ல த்வாதசி திதி. நேரா போய் ஒரு ஆத்து வாசல்ல நின்னுண்டு ‘மாதா பவதி பிக்ஷாம் தேஹி!’னு குரல் குடுத்தாராம். அவாத்துல இவருக்கு குடுக்கர்துக்கு ஒன்னுமே இல்லையாம், அவாத்து மாமிக்கு ஒரே அழுகையா வந்துதாம், ‘ஓஓஓ! இவ்ளோ அழகா இருக்கும் இந்த கோந்தைக்கு குடுக்கர்துக்கு ஒன்னுமே இல்லையே எங்காத்துல!’னு ரொம்ப வருத்தப்பட்டாளாம், அப்பரம் ஒசரத்துல கூடைல இருந்த ஒரு தக்குனூண்டு நெல்லிக்காயை கொண்டு போய் பிக்ஷாபாத்ரத்துல போட்டாளாம்.



சங்கரார்கு அவாளோட முகத்தை பாத்த மாத்ரத்துல விஷயம் புரிஞ்சு போய், உடனே மனசுல மஹாலெக்ஷ்மி உம்மாச்சியை ‘கனகதாராஸ்தோத்ரம்’ சொல்லி தியானம் பண்ணினாராம். அவாளும் ‘டஷ்ஷ்ஷ்!’னு வந்துட்டாளாம். ‘இவாளோட கர்மா இன்னும் தீரலையே கோந்தை! அப்பரம் எப்பிடி இவாளுக்கு ஐஸ்வர்யத்தை குடுக்க முடியும்?’னு கேட்டாளாம், அதுக்கு உடனே நம்ப சங்கரர் உம்மாச்சி, ‘அப்பிடி எல்லாம் நீங்க சொல்லக் கூடாது, தாயார் குடுக்கனும்னு நினைச்சா யாராலையும் அதை தடுக்க முடியாது, தானம் பண்ணனும் அப்பிடிங்கர இந்த நல்ல குணத்தை மனசுல வெச்சுண்டு இவாளுக்கு நீங்க அனுக்ரஹம் பண்ணித்தான் ஆகனும்!’னு கொழந்தை முகத்தோட கெஞ்சி கேட்டோனே, கருணையே வடிவான நம்ப மஹாலக்ஷ்மி உம்மாச்சியால ஒன்னுமே சொல்ல முடியலையாம், உடனே அவாம் முழுவதும் ஸ்வர்ண நெல்லிக்காய் மழை மாதிரி கொட்டிருத்தாம்.

சங்கரர் உம்மாச்சி ஜனனம் பண்ணின சமயம் ஒரு ஒழுங்கு இல்லாம எல்லாரும் அலைபாஞ்சுண்டு இருந்தா, அப்புறம் இவர்தான் எல்லாத்தையும் ஒழுங்கு பண்ணி அழகா ஆறு விதமா பிரிச்சு குடுத்தார்.

காணாபத்யம்
கௌமாரம்
சைவம்
வைணவம்
சாக்தம்
சௌரம்

இன்னிக்கி கணேச சதுர்த்திக்கு கோக்கட்டை(கொழுக்கட்டை),கிருஷ்ண ஜெயந்திக்கு அதிர்ஸம்,ரவாலாடு,முள்ளு தேங்குழல்,சக்கரச்சீடை,தேங்காசீடை, முக்கியமா பால் திரட்டிப்பால், ஹனுமத் ஜெயந்திக்கு வடை எல்லாம் நமக்கு கிடைக்கர்துக்கு அவர்தான் காரணம். அற்புதமான இந்த ஸனாதன தர்மத்தை காப்பாத்தி எல்லா உம்மாச்சிக்கும் ஹாப்பி பர்த்டே! சொல்லர்துக்கு காரணமான அவருக்கு நாம எல்லாருமே கடமை பட்டு இருக்கோம்.

வரக் கூடிய பதிவுகள்ல இந்த ஆறு விதமான ஆராதனை பத்தி கொஞ்சம் தகவலும் வழக்கம் போல ஒரு குட்டி உம்மாச்சி ஸ்லோகமும் சொல்லலாம்னு தக்குடு கோந்தை மனசுல நினைச்சுண்டு இருக்கு. உம்மாச்சி அனுக்ரஹத்துல நல்ல படியா வரணும். சரி, இந்த வாரத்துக்கான உம்மாச்சி ஸ்லோகம் & அர்த்தம் பாக்கலாமா?

//ச்ருதி ஸ்ம்ருதி புராணானாம் ஆலயம் கருணாலயம் நமாமி பகவத்பாதம்
சங்கரம் லோக சங்கரம்//

ஸ்லோகத்தோட அர்த்தம் - வேதங்கள், சாஸ்திரங்கள் மற்றும் புராணங்களின் ஆலயமாகவும், பரம கருணாமூர்த்தியாகவும் இருக்கும் சங்கரபகவத்பாதரை பணிகிறேன்.

சங்கரம் அப்பிடின்னா மங்களம்னு அர்த்தம், யாருக்கு மங்களம்? லோகத்துக்கே மங்களமாய் அமைந்தவர். மங்களம் அப்பிடிங்கர்து பொதுவான ப்ரயோகம், எப்பிடி எல்லாம் இருக்குன்னா? வித்யார்த்திகளுக்கு நல்ல கல்வியறிவு மங்களம், வியாபாரத்ல உள்ளவாளுக்கு தனம்தான் மங்களம், கல்யாணம் ஆன ஸ்த்ரீகளுக்கு ஸத்புத்ராதிகள் மங்களம், வயசானவாளுக்கு முக்திதான் மங்களம்.

சம்-கரோ-இதி சம்கரஹா = நன்மையை மட்டும் செய்பவனே சங்கரன்.

Friday, June 25, 2010

குரு/ஆச்சார்யன்

எல்லாரும் செளக்கியமா இருக்கேளா? இந்த பதிவுல குரு உம்மாச்சியை பத்தி நாம எல்லாரும் கொஞ்சம் பாக்கலாமா?

தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருஉரு சிந்தித்தல் தானே.



குரு - அப்படின்னா ஆசிரியர், ஆசான் அப்படின்னு பல வார்த்தை ப்ரயோகங்கள் இருக்கு. எந்த ஒரு கார்யமானாலும் கணபதிக்கு அடுத்தபடியா நாம ப்ரார்த்தனை பண்ண வேண்டிய ஒரு உம்மாச்சி இந்த குரு. ‘உம்மாச்சியே உலகத்துல கிடையாதே!’னு வாய் வலிக்காம சொல்லிக்கர சில மனுஷா கூட தான் இன்னாருடைய சித்தாந்தத்தை பின்பற்றி நடக்கறேனாக்கும்!னு தன்னுடைய குருவின் பெருமையை சொல்லாம இருக்கமாட்டா. அப்பேற்பட்ட மஹாத்மியம் உள்ள உம்மாச்சி இந்த குரு.

குரு-ங்கர சப்தத்துக்கு பக்கத்தில் அழைச்சுண்டு போறவர்நு ஒரு அர்த்தம் உண்டு. எதோட பக்கத்தில் அழைச்சுண்டு போவார்?னு நாம திருப்பி கேட்டோம்னா, அது நமக்கு வாய்ச்ச குருவை பொறுத்து வித்யாசப்படும். நாம போகும் போதே ஐஸ்வர்யங்களை நினைச்சுண்டு போறோம், நிறையா காசு பணம் வரனும், அழகு சுந்தரியா ஆத்துக்காரி வரனும், லட்டு மாதிரி குழந்தேள் பொறக்கனும், அரண்மனை மாதிரி வீடு கட்டனும்(முக்கியமா பக்கத்தாத்தை விட அழகா இருக்கனும்),படிச்ச படிப்பை விட பெரீய உத்யோகம் கிட்டனும் இப்படியெல்லாம் நம்ம ப்ரார்தனை இருக்கர்துனால அதுக்கு செளகர்யமா உள்ள குருவா நாம தேட வேண்டி இருக்கு, யாராவது பிரம்மத்தை தெரிஞ்சுக்கனும், நல்ல சித்தாந்த ஞானம் வரனும், திருப்தியான மனசு வேணும்! அப்படியெல்லாம் யோசிக்கரோமா? ஒரு கதை உண்டு,

சுப்புணி மாமா நு ஒரு மாமா இருந்தாராம், அவருக்கு குடும்பம், பந்த பாசம் எல்லாம் விட்டுட்டு காட்டுக்கு போய் தபஸ் பண்ணனும்னு ஒரு ஆசை இருந்துதாம். ஒரு நாள் மத்யானம் நன்னா சுகமா அவாத்து மாமி சமையலை சாப்டுட்டு ஈச்சர் சேர்ல தாச்சுண்டு இருக்கும் போது, தனக்கு தானே சொல்லி பாத்துண்டாராம், ஏ சுப்புணி! உன்னோட பொறுப்பு எல்லாம் கழிஞ்சுருத்துடா! மூத்த பையனுக்கு நல்ல பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணியாச்சு, இளைய பொண்ணை MS படிச்ச ஒரு US மாப்பிள்ளை(இளிச்சவாயன்) தலைல கட்டியாச்சு, பாக்யத்துக்கும்(அவாத்து மாமியோட பேரு)கடைசி காலம் வரைக்கும் காணர மாதிரி ஸ்டேட் பாங்கல FD போட்டு வெச்சாச்சு, இனிமே தைரியமா நாம காட்டுக்கு போய் தபஸ் பண்ணலாம்!னு தனக்கு தானே சொல்லிண்டாராம்.

காட்டுல குளுருமே?னு யோசிச்சுட்டு நல்ல கம்பளி போர்வை மேலும் இன்ன பிற சாமான் செட்டெல்லாம் எடுத்துண்டு காட்டுக்கு போகர்துக்கு ரெடி ஆனாராம், எல்லாம் ரெடி பண்ணி முடிக்கும் போது மத்யானம் 3 மணி ஆயிடுத்தாம், யே பாக்யம்! நான் காட்டுக்கு போய் தபஸ் பண்ண போறேன்டி!னு பெருமையா சொன்னாராம். அரை தூக்கத்துல இருந்த பாக்யம் மாமி, 'எங்க வேணும்னாலும் போய்ட்டு வாங்கோ! என்னோட ப்ராணனை வாங்காம இருந்தா சரி!'னு சொல்லிட்டு அந்த பக்கமா திரும்பி படுத்துண்டாலாம். சுப்புணி மாமா விடாமா, 3 மணி பால்காரன் வர நேரம் ஆகர்து! ஒன்னோட கையால ஒரு காபியை போட்டு தந்தைனா தெம்பா குடுச்சுட்டு போவேன்!னு அவர் சொன்னதுக்கு மாமிடேந்து பதிலே வராததால சரி கிளம்புவோம்!னு கிளம்பி வெளில வந்தாராம். வாசல் வந்தவர் அங்க வெளில இருந்த வெண்கல சொம்பை பாத்துட்டு, யே பாக்யம்! எத்தனை தடவை சொல்லியிருக்கேன்டி! வெண்கல சொம்பை அச்ரத்தையா வெளில வெக்காதீங்கோ! வெக்காதீங்கோ!னு, வெண்கலம் விக்கர விலைல திருப்பி வாங்க முடியமா?னு சொல்லிட்டு, இப்படி போப்பு(தக்குடு பாஷையில் பொறுப்பு) இல்லாம இருக்கர இவாளை நம்பி நான் எப்படி காட்டுக்கு போக முடியும்!னு சொல்லிண்டே ஆத்துக்குள்ள போய்ட்டாராம். இந்த மாதிரி சுப்புணிகள் அவாளுக்கு ஏத்த மாதிரியான குருவைதான் செலக்ட் பண்ணிப்பா.


குருங்கப்பட்டவருக்கு வயசு வரையறை எல்லாம் கிடையாது, தன்னோட கைல இருக்கர நல்ல சாமானை அடுத்தவாளுக்கு சிரிச்ச முகத்தோட ஒரு குழந்தை கொடுக்கர்தை நாம பாத்துட்டு நாமளும் அந்த குணத்தை கத்துண்டோம்னா அந்த குழந்தை நமக்கு குருதான். ஊருக்கு வெளில 3 கிலோமீட்டர் இடத்துல ஒரு ஆசிரமும், 4 அடிக்கு தலைல முடியும், வெண்ணையா ஒரு முகமும் இருந்துட்டா அவர்கள் எல்லாரும் ஆச்சார்யன் ஆகிட முடியாது, அதுக்கு ஒரு பாரம்பர்யம், பல வித்யைகளில் தேர்ச்சி, 'தான்' என்னும் எண்ணம் கிஞ்சித் அளவும் இல்லாத உயர்ந்த அறிவு உள்ளவரா இருக்கனும். அந்த மாதிரி ஒரு நல்ல குரு கிடைக்கர்துக்கும் யோகம் இருந்தாதான் கிடைக்கும்.

ஸ்ரீவைஷ்ணவத்தில் ஆச்சார்யன்! ஆச்சார்யன்!னு ரொம்ப சிலாகிப்பார்கள். ஸ்ரீவித்யா உபாசனையிலும் குருவுக்கு மகத்தான ஒரு இடம் உண்டு. முக்கியமா சொல்லனும்னா சீக்கியர்களுக்கு அபாரமான குருபக்தி உண்டு. எது கிடைச்சாலும் குருவின் கருணை!னு நினைக்கும் மனோபாவம் அவாளுக்கு உண்டு. ஸிம்மம் மாதிரியான வீரம், ஆக்ரோஷம் உள்ளவாளா இருந்தாலும் குருவிடம் அவர்களை போல ஒரு பவ்யம் பாக்க முடியாது.

சில குருமார்களோட பெருமையை பாத்தேள்னா அது அவாளோட சித்தாந்தத்தால மட்டும் இருக்காது, அந்த ஆச்சார்ய புருஷர்களோட உயர்ந்த சீலத்தால பல நூற்றாண்டுகளுக்கு அவாளோட கீர்த்தி நிலைச்சு இருக்கு. உதாரணத்துக்கு ஸ்ரீஆதிசங்கரர்,ஸ்ரீராமானுஜர்,ஸ்ரீராகவேந்திர ஸ்வாமிகள்,ஸ்ரீ ஷீரடி சாய்பாபானு பல அவதார புருஷாளை சொல்லிண்டே போகலாம். சரி ஒரு குரு உம்மாச்சி ஸ்லோகம் பாப்போமா இப்போ?



குரவே ஸர்வலோகானாம் பிஷஜே பவரோகினாம் நிதையே ஸர்வவித்யானாம் ஸ்ரீதக்ஷிணாமூர்த்தையே நமஹா!

(ஸர்வ லோகங்களுக்கும் குருவாய் இருப்பவரே! ஸம்ஸாரம் எனும் நோய்க்கு மருந்தாக அமைந்தவரே! ஸகல வித்யைகளுக்கும் உறைவிடமாய் திகழ்பவரான தக்ஷிணாமூர்த்தியே உம்மை பணிகிறேன்)

Saturday, May 22, 2010

உம்மாச்சி காப்பாத்து

எல்லாருக்கும் நமஸ்காரம்! ரொம்ப நாளாவே ஸ்வாமி சம்பந்தமான விஷயங்கள் எழுதனும்னு ஒரு ஆசை உண்டு. என்னதான் மனுஷ்ய வாழ்க்கைல இருக்கும் மாயை பத்தி ஹாஸ்யமா தக்குடுபாண்டி ப்ளாக்ல எழுதிண்டு வந்தாலும் இதுதான் சாஸ்வதமானது அப்பிடிங்கர எண்ணம் மனசுல எப்போதுமே உறுதியா உண்டு.

இருந்தாலும் பெரிய பெரிய ஜாம்பவான்கள் ஏற்கனவே ஆன்மீகத்தை பத்தி ரொம்ப பிரமாதமா எழுதிண்டு இருக்கா, இவாளுக்கு நடுல இந்த குழந்தை எழுதர்து அப்படிங்கர்து கொஞ்சம் கஷ்டமான காரியம்தான். திவா அண்ணா,மதுரையம்பதி அண்ணா,TRC சார்,கீதா மேடம்,குமரன் அண்ணா,KRS அண்ணா,பரவஸ்து அண்ணா இவாளுக்கு நடுல அடியேன் பேசர்து, திக்குவாய்க்காரன் கச்சேரி பண்ணர்துக்கு முயற்சி பண்ணர மாதிரிதான். காட்டுல மழை பெய்து முடிச்சதுக்கு அப்புறம் சிங்கம்,புலி,கரடி & யானை மாதிரி பெரிய ஆட்கள் எல்லாம் அவாளோட மேல இருக்கும் ஈரம் போகர்துக்காக வெயில்ல நின்னு உலர்திண்டு இருந்தாளாம், இதை பாத்துட்டு அங்க இருந்த ஒரு சுண்டெலி நாமளும் எதாவது உலர்த்தனுமேனு யோசிச்சு தன்னோட குட்டி வாலை போய் காய வச்சுதாம். அதை மாதிரி தக்குடுவும் ஸ்வாமி சம்பந்தமா எழுத வந்துருக்கு...;)இருந்தாலும் இவாளை மாதிரி பெரிய அளவுல எழுதாம என்னை மாதிரி குழந்தேளுக்கு புரியர மாதிரி குட்டி குட்டி கதை,ஸ்லோகம், நிகழ்ச்சிகள் எல்லாம் சமயம் கிட்டும் போது போடலாம்னு ஒரு எண்ணம். அதன் காரணமாக உதித்ததுதான் இந்த 'உம்மாச்சி காப்பாத்து'

கணபதி வந்தனம்





//கஜானனம் பூதகணாதி சேவிதம்
கபித்த ஜம்பூ பலசார பக்ஷிதம் உமாஸுதம் சோக வினாச காரணம் நமாமி டுண்டி விக்னேஸ்வர பாத பங்கஜம்//

(அர்த்தம் - யானைமுகம் உடையவரும், பூதகணங்களாலும் சேவிக்கப்படுபவரும்,விளாம்பழம் மற்றும் நாவல் பழத்தை பிரியத்தோடு உண்பவரும், உமாதேவிக்கு பிரியமானவரும்,பக்தர்களின் சோகங்கள் அனைத்தையும் நாசம் செய்பவரும் ஆன டுண்டி விக்னேஷ்வரரின் பாத கமலங்களை வணங்குகிறேன்.)