Friday, September 24, 2010

காணாபத்யம்

பிள்ளையார் உம்மாச்சியை அதிதீவிரமாக ஆராதனை செய்யும் சம்ப்ரதாயத்துக்கு காணாபத்யம்னு ஆதிசங்கரர் பெயர் வெச்சார். கணாபத்யம்நும் சொல்லலாம். கணாபத்யம் = கணம் + அதிபத்யம் . எல்லா கணங்களுக்கும் அதிபதி. கணபதி உம்மாச்சியோட சான்னித்யம் க(Ga) அப்படிங்கர அக்ஷரத்துல ஸ்திரமா உண்டு. அதனால 'காணா'ங்கர அக்ஷரத்துக்கு அதிபதி = காணாபத்யம். அதனால தான் தொப்பையப்பருக்கு முழுசும் ககார சப்தத்திலேயே ஆரம்பிக்கர மாதிரியான ‘ககார’ ஸஹஸ்ர நாமம் ரொம்ப விஷேஷமானது.(எட்டு வருஷமா தக்குடு பூஜை பண்ணின உம்மாச்சி)

எல்லாருக்குமே பிடிச்ச ஒரு உம்மாச்சி இந்த கணபதி. காரணம் என்னனா, இவர் ரொம்ப எளிமையாவர். ரயில்வே ஸ்டேஷன்ல ‘ரயில்வே வினாயகர்!’ங்கர பேர்லையும், பஜார்ல ‘பஜார் வினாயகர்!’ங்கர பேர்லையும், சிவகாசில ‘பட்டாசு வினாயகர்!’ங்கர பேர்லயும் எல்லா இடத்துலையும் உக்காசுண்டு இருப்பார். சின்னக் கொழந்தேளுக்கு எல்லாம் பிடிச்ச மாதிரி யானை முகம் இவருக்கு, சும்மா ஆத்தங்கரை ஓரத்துல வளரும் எருக்கம் பூ, அருகம் புல் போட்டாலே இவருக்கு போதும். சின்னக் குழந்தையாட்டமா அவல்,கடலை,கல்கண்டு,பொரி இதை குடுத்தாலே சந்தோஷப்படக் கூடிய ஒரு குட்டிக் குழந்தை.

கணபதி உபாசனைல ஒளவையார் பாட்டி ரொம்ப முக்கியமானவானு சொல்லலாம். நித்யம் கணபதி உம்மாச்சி பூஜை பண்ணாம அந்த பாட்டி மம்மு சாப்ட மாட்டாளாம். பூஜையும் சும்மா சாதாரணமா எல்லாம் இருக்காது. நன்னா அழகா பூஜா விதானப்படி பண்ணுவாளாம். பூஜைல உக்காசுண்டாச்சுன்னா வேற எதை பத்தியும் யோசிக்கமாட்டாளாம். நம்பாத்துல கல்யாணம் ஆகி பத்து வருஷம் கழிச்சு ஒரு கோந்தை பொறந்ததுன்னா அந்த அம்மா எவ்ளோ பாசத்தோட அதை பாத்துப்பா, அதை மாதிரி இந்த பாட்டியும் மெய்மறந்து பூஜை பண்ணுவாளாம். பாட்டியோட பூஜையோட விஷேஷமே உம்மாச்சிக்கு நிவேத்யம் பண்ணும்போதுதான். கோக்கட்டை,அவல்,பொரி,அப்பம் எல்லாம் வெச்சு நிவேத்யேம் பண்ணும் போது ‘டஷ்ஷ்ஷ்ஷ்!’னு பிள்ளையார் உம்மாச்சி பிரசன்னமாகி பக்கத்துலையே உக்காசுண்டு கையை நீட்டி நீட்டி வாங்கி சாப்டுவாராம்.

ஒரு நாளைக்கு ஒளவையார், பிள்ளையார் உம்மாச்சி பூஜை பண்ணிண்டு இருக்கும் போது ரிஷிகள்,சித்தர்கள் எல்லாரும் நடையும் ஓட்டமுமா போய்ண்டு இருந்தாளாம். ஒளவையார் அதை எல்லாம் கவனிக்கவே இல்லை. ஒரு ரிஷி மட்டும் சும்மா இருக்காம, ‘என்ன ஒளவை!! கைலாசத்துக்கு நீ இன்னும் கிளம்பலையா? பரமேஷ்வரனோட ஆனந்த நடன தரிசனம் நோக்கு வேண்டாமா?’னு கேட்டாராம். அவர் கேட்டதுக்கு அப்பரம் தான் ஒளவைக்கு ஞாபகமே வந்ததாம். ‘நீங்க போய்ட்டு வாங்கோ! நான் இப்பதான் பூஜையே ஆரம்பிச்சுருக்கேன். இன்னும் அந்த புள்ளை வேற சாப்ட வரனும், அவன் மெதுவாதான் சாப்டுவான் பாவம், அவசரபடுத்தினா அவனோட தொண்டைல போய் மோதகம் அடச்சுக்கும்!’னு சொல்லிட்டு பூஜையை தொடர்ந்து பண்ணினாளாம்.(கணபதி யந்திரம்)

சொன்னாளே தவிர மனசுக்குள்ள சிவன் உம்மாச்சியோட அபூர்வமான நடனத்தை பாக்கனும் ரொம்ப ஆசையா இருந்ததாம். ஆனா அதுக்காக பூஜையை ஓட்டித்தள்ளாம வழக்கம் போல நிதானமாவே பண்ணினாளாம். நிவேத்யம் பண்ணர்துக்கு ‘டிங்!டிங்!டிங்!’னு மணி அடிச்ச உடனே தொப்பையப்பர் ‘இதோ வந்துட்ட்ட்டேன்!’னு சொல்லிண்டே தும்பிக்கையை ஆட்டிண்டு வந்துட்டாராம். கோக்கட்டை,அப்பம்,அவல்,பொரி,கடலை சுண்டல் எல்லாம் நன்னா திவ்யமா சாப்டுட்டு கைல இருந்த மிச்சத்தை (நாம நம்ப அம்மா புடவைல தொடைக்கர மாதிரி) அவர் ஒளவையோட முந்தானைல தொடச்சாராம். ‘ஏஏஏஏஏப்ப்ப்!’னு ஒரு ஏப்பத்தையும் விட்டுட்டு, (மெதுவா அவரோட தொப்பையை தடவிண்டே) என்ன ஒளவை! நீ எங்கப்பாவோட டான்ஸ் பாக்கர்த்துக்கு போகலையா?னு கேட்டாராம். நோக்கென்னடாப்பா! சுகமா சாப்பாட்டாச்சு, நினைச்ச மாத்ரத்துல கைலாசமும் போய்டுவாய், நான் இனிமே கிளம்பி போய் சேரர்துக்குள்ள அங்க எல்லாம் முடிஞ்சுடும், நீ சப்ப்ளாம் போட்டு உக்காசுண்டு என்னோட கையால வாங்கி சாப்ட அழகை பாத்ததே நேக்கு போதும்!னு பாட்டி சொன்னாளாம். தும்பிக்கையாள்வார் உடனே, ‘பாட்டி! என்னோட தும்பிக்கையை நன்னா கெட்டியா பிடிச்சுண்டு கண்ணை இறுக்கி மூடிக்கோ!’னு சொன்னாராம். அடுத்த நிமிஷம் பாட்டி கண்ணை திறந்து பாத்தா கைலாசத்துல முதல் வரிசைல முதல் ஆளா உக்காசுண்டு இருந்தாளாம். ‘பாட்டி! இது என்னோட சீட்டு, உன்னை யாரும் எழுப்ப முடியாது. நன்னா எங்கப்பாவோட டான்ஸ்ஸை பாத்துட்டு வா!’னு குழந்தை சிரிப்போட பிள்ளையார் உம்மாச்சி சொன்னாராம்.

அந்த சந்தோஷத்துல மடை திறந்த வெள்ளம் மாதிரி ஒளவையார் பாடினதுதான் 'வினாயகர் அகவல்'. உண்மையான அன்போட யாரு வினாயகர் அகவல் சொன்னாலும் தொப்பையப்பருக்கு பழைய ஞாபகம் வந்து சொன்னவாளை எல்லா விதத்துலையும் உயரமான ஸ்தானத்துக்கு தும்பிக்கையால தூக்கிவிட்டுடுவாராம்.

தும்பிக்கை மேல சஞ்சலம் இல்லாத நம்பிக்கை இருந்ததுன்னா, அவாளை தொப்பையப்பர் ஒரு நாளும் கை விட மாட்டார். தொப்பையப்பர், குழந்தை மாதிரி மனசையும், உறுதியான நல்ல வைராக்கியமான எண்ணங்களையும், விடாமுயற்சியையும் நமக்கு தரட்டும்!னு ப்ரார்த்தனை பண்ணிப்போம்.

ஒரு உம்மாச்சி ஸ்லோகம் பாக்கலாமா இப்போ?சிவதனயவரிஷ்டம் ஸகலகல்யாணமூர்த்திம் பரசு கமலஹஸ்தம் மூஷிகம் மோதகேன

அருணகுசுமமாலா வ்யாளலம்போதரம்தம் மம ஹ்ருதயனிவாசம் ஸ்ரீகணேசம் நமாமி
!

அர்த்தம் - சிவனோட அன்பான புள்ளையும், எல்லாவிதமான செளபாக்கியகுணமும் பொருந்திய, தாமரை,பரசு,மோதகத்தை கையில் தாங்கும் மூஷிக வாஹனனும், சூரியனை போன்ற சிவப்பானதும், வாசனை மிக்கதுமான மாலையை அணிந்தவனும்,அழகான தொங்கிய உலகம் போன்ற பெரிய வயிற்றை உடையவனும், எனது இதயகமலத்தில் நீங்காது நித்தியம் வாசம்செய்யும் கணேசனை வணங்குகிறேன்