Saturday, November 27, 2010

சைவம்

ரொம்ப நாள் ஆச்சு உம்மாச்சி போஸ்ட் போட்டு, இன்னிக்கி ஒரு உம்மாச்சி போஸ்ட் பாக்கலாமா எல்லாரும். சிவன் உம்மாச்சியை முழுமுதற் கடவுளா ஆராதனை பண்ணும் முறைக்கு சைவம்னு சங்கரர் உம்மாச்சி பெயர் வெச்சார். விளையாடிப் பாக்கர்துல இந்த உம்மாச்சிக்கு அவ்ளோ சந்தோஷம் உண்டாம். கடைசில பக்தன் கேட்டதை எல்லாம் கைல குடுத்துட்டு வரும் அளவுக்கு தயானிதியாகவும் இந்த உம்மாச்சி இருக்கார். சைவத்தை விருக்ஷமா வளர வெச்ச நால்வர்ல ஒருவரான திருனாவுக்கரசரை ஒரு சமயம் ஒரு ராஜா சமண மதத்துக்கு மாறியே ஆகனும்னு வற்புறுத்தினானாம். இவர் அதுக்கு ஒத்துக்கவே இல்லையாம். உடனே நனா கொதிக்கர சுண்ணாம்பு கலவாய்க்குள்ள அவரை இறக்குனு இரக்கமே இல்லாம சொல்லிட்டானாம் அந்த ராஜா.



தக்குடுவோட உம்மாச்சி!!..:)

நாமா இருந்தா அய்யோ! அம்மா!னு கத்தி இருப்போம் இல்லையா? ஆனா திருனாவுக்கரசர் அழகான ஸ்ருதியோட பதிகம் பாட ஆரம்பிச்சாராம். அதுவும் அவர் பாடின பதிகத்தோட அர்த்தத்தை பாத்தோம்னா இன்னும் ஆச்சர்யமா இருக்கும்.

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே.

பொருள் - லோகத்துக்கே அப்பா மாதிரி இருக்கும் சிவன் உம்மாச்சியோட நிழல்ல நான் இருக்கும் போது எனக்கு சுருதி குத்தம் இல்லாத வீணை நாதமும், அழகான சாயங்கால சமயம் வரும் நிலாவோட குளிர்ச்சியும், ஜிலுஜிலுனு காத்தும்,குளிச்சியான பூவை 'ஒய்ய்ய்ங்' வட்டம் அடிக்கும் வண்டுகளோட சத்தம் இதெல்லாம் இப்போ நான் அனுபவிக்கர மாதிரி இருக்கே!னு சந்தோஷமான முகத்தோட பாடினாராம் அந்த மஹான். அவர் சொன்ன மாதிரியே அவரோட உடம்புக்கு கொதிக்கும் சுண்ணாம்பால 'உவ்வா' எதுவுமே வரலையாம்.

கொதிக்கும் கலனில் அமர்ந்து குதிக்கும் பாதங்களை துதிக்கும் அவர் பாடல்களை உதிக்கும் வேளையில் தியானம் செய்வர் பலர்.




ஒரு சமயம் அசுர சிற்பி மயன் கர்மசிரத்தையா ஒரு நந்தி விக்ரஹம் செதுக்கிண்டு இருந்தாராம். பல வருஷமா செதுக்கிண்டே இருந்தாராம். சில சமயம் மம்மு சாப்டர்தை கூட மறந்தே போய்ட்டாராம். பல வருஷத்துக்கு அப்புறம் அந்த நந்தி விக்ரஹம் செஞ்சு முடிச்சு கடைசியா அந்த விக்ரஹத்துக்கு கண் திறந்தாராம். சில்பசாஸ்த்ர விதிபடி எந்த வித பின்னமும் இல்லாம, கர்ம ச்ரத்தையோட, அன்னாஅகாரம் இல்லாம செய்யப்பட்ட ஒரு விக்ரஹத்துக்கு கண் திறக்கும் போது ஜீவன் வந்துடுமாம். அதே மாதிரி மயன் பண்ணின இந்த நந்திக்கும் ஜீவன் வந்து எழுந்துடுத்தான்.

ஓஓஓ!!! இப்ப என்ன பண்ணனு தெரியலையே!!னு திகைச்சு போன மயன் டபக்குனு கைல இருந்த உளியை வெச்சு நந்தியோட முதுகுல ஒரு கோடு போட்டாராம். உடனே அது அந்த கோலத்துலையே மறுபடியும் சிலை ஆயிடுத்தாம்.அந்த நந்தி இருக்கும் இடம் திருனெல்வேலி ஜில்லால ஆழ்வார்குறிச்சிக்கு பக்கத்துல கடனா நதிக்கரைல இருக்கும் சிவசைல நாதர் கோவில். சிவசைலனாதராத்து மாமியோட பேர் பரமகல்யாணி அம்பாள்.



சிவசைலபதி


சிவன் உம்மாச்சி ஆதி காலத்துலையே தன்னோட சரீரத்துல பாதியை அவராத்து மாமிக்கு குடுத்த பெண்ணியவாதி. அதே மாதிரி ஆத்துக்காரியை தலைல தூக்கி வெச்சுண்டு ஆடர பழக்கத்தை லோகத்துக்கு காட்டி குடுத்தவரும் இவர் தான்...;)

சங்கரர் உம்மாச்சி ஸ்தாபனம் பண்ணின ஆம்னாய பீடங்கள் எல்லாத்துலையும் உம்மாச்சியோட பேர் மட்டும் எப்போதுமே சந்த்ரமெளலிஸ்வரன் தான். அம்பாளோட பேர்தான் வித்தியாசப்படும். சங்கரன்.சந்த்ரசேகரன்,சம்பு,உமாபதி,சிவகாமினாதன், நீலகண்டன் இந்த மாதிரி பல நாமதேயங்கள் இந்த உம்மாச்சிக்கு.


இந்த சிவன் உம்மாச்சியை ஆராதனை பண்ணினா என்ன கிட்டும்? ஒரு இடத்துலயே நிலை கொள்ளாம தையா! தக்கா!னு இவர் ஆடிண்டே இருந்தாலும், இவரை ஸ்படிகம் மாதிரியான சுத்தமான மனசோட த்யானம் பண்ணினா அவாளுக்கு மனசை அடக்கும் சக்தி கிட்டும். பசி தாகம் இந்த மாதிரியான சரிர உபாதைகள்னால எல்லாம் அவாளோட மன உறுதியை தளர்த்த முடியாது. ஜோதிஸ்வரூபனா த்யானம் பண்றவாளோட கண்கள் இரண்டும் ஜோதி மாதிரி மின்னும். கைல இருக்கும் எதையும் பற்றுதல் இல்லாமல் அள்ளிக்குடுத்து அதுல சந்தோஷம் அடையக் கூடிய தயாளமான மனசு இவாளுக்கு இருக்கும். சிவன் உம்மாச்சி அவரே ‘அடியார்க்கும் அடியேன்!’னு சொன்னதால அவரோட பக்தாளுக்கும் அந்த பணிவான பாவம்(Baavam) மனசுல எப்போதும் இருக்கும்/இருக்கனும்.



தக்குடுவின் அலங்காரத்தில்...:)

இப்பொ ஒரு குட்டி ஸ்லோகம் பாக்கலாமா?

//வஜ்ர தம்ஷ்ட்ரம் த்ரினயனம் கால கண்ட மரிந்தமம்
ஸஹஸ்ரகர மத்யுக்ரம் வந்தே சம்புமுமாபதிம்
//.

(அர்த்தம் - வஜ்ரம் மாதிரியான உடலையும், மூன்று கண்களையும், காலனை கண்டத்தில் மரித்தவனும்,உக்ரமான ஆயிரம் கைகளை உடையவனும் ஆன உமாபதியை வணங்குகிறேன்.)