Thursday, March 31, 2011

செளரம்

இன்னிக்கி நாம பாக்கப் போகும் வழிபாடுமுறை செளரம். சூரியன் உம்மாச்சியை முழுமுதற் கடவுளா ஆராதனை பண்ணும் முறைக்கு செளரம்னு பேர். லோகத்துல உம்மாச்சி இருக்கார் இல்லைனு சொல்லறவா எல்லாரும் ஒத்துமையா ஒத்துக் கொண்டு கண்ணுல ஒத்திக்கும் ஒரு உம்மாச்சி யாரு?னு கேட்டாக்கா அது நம்ப சூரிய நாராயணர் தான்.



குதிக்கும் குதிரையுடன் உதிக்கும் செங்கதிரவன்

'கண்ணில் தெரியும் கடவுள்'னு இவரை தாராளமா சொல்லலாம். லோகத்துல நடக்கும் எல்லா விஷயத்துக்கும் எதாவது ஒரு வழில நம்ப சூரி உம்மாச்சியோட சம்பந்தம் இருக்கும். எந்த தேசத்துக்கு போனாலும் காத்தால எழுந்த உடனே தரிசனம் பண்ணர்த்துக்கு நம்ப கூடவே வரும் ஒரு உம்மாச்சியும் இவரே. சிலபேர் மணி பாக்கர்துக்கே நோக்கியா போனை தேடும் இந்த காலகட்டத்துல, சூரியன் உம்மாச்சிதான் ஒரு காலத்துல கடிகாரமாகவும் இருந்தார்னு சொன்னா நம்பமுடியுமா? கிழக்க உதிக்கும் நேரம் ப்ராதக் காலம், தலைக்கு மேல வந்து நின்னா மாத்யானிக காலம், மேற்கே போய் மறையும் நேரம் சாயங்காலம்னு வந்துண்டு இருக்கார். இடைகாடர்னு ஒரு சித்தர் சந்தியாவந்தனம் பண்ணும் போது அர்க்யம் குடுக்க வேண்டிய காலத்தை பத்தி சொல்லும் போது " காணாமல் கோணாமல் கண்டு கொடு!"னு சொல்லி வச்சுட்டு போயிருக்கார். கர்மானுஷ்டானங்கள் எல்லாத்தையும் தொலச்சவாதானே சித்தர், அவர் எதுக்கு சந்தியாவந்தனம் எனும் அனுஷ்டானம் பத்தி கவலைபடறார்னு எல்லாம் குதர்க்கமா ஆராய்ச்சி பண்ணாம ஒழுங்கா பண்ணினா நமக்குதான் ஷேமம்.


உதயகால சூரிய ஒளி கண்ணுக்கு நல்லது கிடையாது அதனால காணர்த்துக்கு முன்னாடியும், மத்தியான கால சூரியன் உஷ்ணம் ஜாஸ்தியா இருந்தாலும் போட்டோ காமிரா மாதிரி ஒரு துவாரம் வரும்படியா கையை வச்சுண்டு சூரியனை பாத்தாக்கா கண்ணுக்கு பலம், அஸ்தமன காலத்துல வரும் சூரிய ஒளி கண்பார்வைக்கு ஸ்ரேஷ்டமானதால கண்டு குடுக்க சொல்லி இருக்கா!னு விளாவாரியா தெரியாம நாம பண்ணினாலும் பலன் கிட்டாமல் இருக்காது.

ஒரு விதத்துல பாத்தாக்க சூரியன் உம்மாச்சி ஒரு யோகி!னு சொல்லலாம். பலனை பத்தி கொஞ்சமும் சிந்தனை பண்ணாம கர்மஸ்ரத்தையா தனுக்கு குடுக்கப்பட்ட கார்யத்தை நாள் தவறாம பண்ணறாரே!! அவர் ஒரு நல்ல ஞானியும் கூட, இல்லைனா ஆஞ்சனேயருக்கு குருனாதரா இருந்து பாடம் சொல்லி குடுத்து இருக்க முடியுமா! நவக்ரஹங்கள்ல இவர்தான் ப்ரதானமான மூர்த்தி. ராமாயணத்துல ஒரு இடத்தில் அகஸ்திய ரிஷி ராமனுக்கு சூரியன் சம்பந்தமான ஒரு உம்மாச்சி ஸ்லோகம் சொல்லி தருவார். அந்த உம்மாச்சி ஸ்லோகத்துக்கு ஆதித்ய ஹ்ருதயம்!னு பேர். யஜுர் வேதத்துல ஸூர்ய நமஸ்காரம்னு தனியா உண்டு, வித்வான்கள் அதை 'அருணம்'னு சொல்லுவா. ஆவணி மாதம் ஆதவனுக்கு உகந்த மாதம். ஆவணி ஞாயிற்றுக் கிழமைகள்ல ப்ராதக்காலத்துல இந்த அருணப்ரஷ்ணம் பாராயணம் பண்ணி நமஸ்காரம் பண்ணினா ரொம்ப நல்லது. அது பண்ண முடியாட்டாலும் ஆதித்யஹ்ருதயம் சொல்லி 12 நமஸ்காரம் பண்ணலாம்.



உதயகால பாஸ்கரன்

சூரி உம்மாச்சிக்கு உகந்த வர்ணம் சிவப்பு அதனால சிகப்பு நிற புஷ்பங்கள் அவருக்கு ரொம்ப ப்ரீதி, குறிப்பா சொல்லனும்னா செந்தாமரை கிடைச்சா ஸ்ரேஷ்ட்டம். கோதுமை அவரோட தான்யம் கோதுமைல மிதமான திதிப்பு போட்டு நெய்மணத்தோடு நல்ல மனதுடனும் பாயஸம் பண்ணி சமர்ப்பணம் பண்ணினா சந்தோஷமா வாங்கிப்பார்.

ஆரம்ப காலத்துலேந்து தூய்மையான மனஸோடையும் தேகத்தோடையும் ஆதித்யனை ஆராதனை பண்ணரவாளுக்கு , சுடர் மிகும் அறிவுடன் சுட்டும் விழிச்சுடராய் கண்பார்வையும் கிட்டும். மாறுபட்ட குணாதிசயங்கள் உள்ள பலபேரை ஒரே திசையில் வழி நடத்தி செல்லக் கூடிய தலைமை குணம் கிடைக்கும், நேர்மையான வழியை மட்டுமே மனசு எப்போதும் சிந்திப்பதால் நிமிர்ந்த நடையும், நேர்கொண்ட பார்வையும்,புவியில் யாருக்கும் அஞ்சாத வைர நெஞ்சமும் கிட்டும், எடுத்த காரியத்திலிருந்து சற்றும் மாறாத மன உறுதி கிட்டும்.
நவகிரஹங்கள் பத்தி எதிகாலத்துல வரப்போகும் பதிவுல இன்னும் கொஞ்சம் விஷயமும் ஜாதக கட்டத்துல சூரியன் இருக்கர்துனால வரும் சாதக பாதகங்கள் & அபூர்வமான ஒரு யந்த்ரத்தோட படமும் பாக்கலாம் சரியா!!



தர்மபத்னிகள் சமேதராய்....

சூரியனோட உம்மாச்சி ஸ்லோகம் பாக்கலாமா இப்போ!!

//ஜயதி ஜயதி சூர்ய சப்தலோகைக தீபஹ
கிரணம் ருதித தாப ஸர்வ துக்கஸ்ய ஹர்த்தா
அருணகிரணகம்ய சாதிராதித்ய மூர்த்திஹி
பரமபரம திவ்ய பாஸ்கரஸ்தம் நமாமி//

ஸ்லோகத்தோட பொருள் - ஏழு லோகங்களுக்கும் தீபஜோதியாய் இருப்பவரும்,எல்லா விதமான துக்கங்களை போக்குபவரும்,தேஜஸுடன் ஜொலிப்பவரும்,உன்னதமானவைகளில் எல்லாம் உன்னதமானவரும் ஆன பாஸ்கரனை நமஸ்கரிக்கிறேன்.

குறிப்பு - இந்த பதிவுடன் ஷட்தர்சனம் எனும் தலைப்பில் வந்த உம்மாச்சி பதிவுகள் பூர்ணம் அடைந்தது. வரும் காலங்களில் குட்டி குட்டி தலைப்புகளில் உம்மாச்சி & பாரம்பர்யம் சம்பந்தமான பதிவுகளை நாம் பார்க்கலாம்.