Friday, October 15, 2010
கெளமாரம்
எல்லாரும் உம்மாச்சியோட அருளால செளக்கியம்னு தக்குடு நம்பர்து. இன்னிக்கி கெளமாரம் பத்தி கொஞ்சம் பார்க்க போறோம். முருகனை பிரதான ஆராதனா மூர்த்தியாக வழிபடும் முறைக்கு கெளமாரம்நு சங்கரர் உம்மாச்சி பேர் வச்சார். முருகு=அழகு அதனால முருகன்னு சொன்னாலே அழகன்னு அர்த்தம். கந்தன்,கடம்பன்,கார்த்திகேயன்,குஹன்,ஷண்முகன் அப்படின்னு இந்த உம்மாச்சிக்கு பல நாமதேயங்கள். உமாபதி,லெக்ஷ்மீபதி,மதுரையம்பதி மாதிரி இவருக்கு தேவஸேனாபதினு ஒரு பேர் உண்டு. இந்த பேருக்கு 2 அர்த்தம் உண்டு. தேவஸேனா பதி!னு பிரிச்சா தேவஸேனையோட ஆத்துக்காரர்னு ஒரு அர்த்தம் வரும். அதே சமயம் தேவ ஸேனாபதினு பிரிச்சா தேவர்களின் படைத் தலைவன்னு ஒரு அர்த்தம் வரும்.
தமிழ் கடவுள் அப்பிடின்னு சொன்னாலே அது முருகன் தான். வேற எந்த உம்மாச்சிக்கும் அந்த சிறப்பு பெயர் கிடையாது. இந்த அழகனோட 6 முக்கியமான கோவில்கள்ல திருச்செந்தூர் ஒரு முக்கியமான ஷேத்ரம். சூரபத்மனை வதம் பண்ணாம தன்னோட சேவல் கொடியாவும், மயிலாவும் ஏத்துண்ட அற்புதமான ஒரு இடம். இங்க உள்ள உம்மாச்சி வெற்றி வடிவேலனா காட்சி குடுக்கர்துனால இவருக்கு 'ஜெயந்தி நாதர்'னு ஒரு அழகான பேர் உண்டு.
ஒரு தடவை சங்கரர் உம்மாச்சி தென் திசைல இருக்கும் உம்மாச்சி கோவிலுக்கு எல்லாம் போய் அங்க உள்ள உம்மாச்சி பத்தி குட்டி குட்டி ஸ்லோகம் எல்லாம் சொல்லிண்டு வந்துண்டு இருந்தார். திருசெந்தூர் வந்த அவருக்கு தாங்க முடியாத தொப்பை வலி வந்துதாம், அவரும் என்னலாமோ மாத்திரை மருந்து எல்லாம் முழுங்கி பார்த்தாராம். தொப்பை வலி போகவே இல்லையாம். ஓஓஒ! என்ன பண்ணர்துன்னே தெரியலையே முருகா!னு ரொம்ப வருத்தப்பட்டாராம். அப்போ அங்க வந்த ஒரு கோவில் மாமா இவருக்கு விவிடி(விபூதி)யை ஒரு குட்டியூண்டு பன்னீர் இலைல வெச்சு குடுத்துட்டு டஷ்ஷ்ஷ்ஷ்!னு மறைஞ்ச்சு போய்ட்டாராம்.
சங்கரர் உம்மாச்சி அந்த விவிடியை நெத்தில இட்டுண்டு கொஞ்சம் தொப்பைலையும் தடவிண்டாராம். உடனே, ‘தொப்பை வலி போயிந்தே! போயே போச்சு!’னு சந்தோஷமா சொல்லற அளவுக்கு தொப்பை வலி போயே போய்டுத்தாம். உடனே சந்தோஷத்தோட அவர் சொன்ன உம்மாச்சி ஸ்லோகம் தான் 'சுப்ரமண்ய புஜங்கம்'. மேலும் இந்த பன்னீர் இலை விபூதியை யாரெல்லாம் முழு நம்பிக்கையோட இட்டுக்கராளோ அவாளுக்கு எல்லா விதமான வியாதியும் குணமாகும்!னு எல்லாருக்கும் சொன்னாராம். புஜங்கம் அப்படின்னா அந்த ஸ்லோகம் ஒரு பாம்பு வளைஞ்சு வளைஞ்சு போகர மாதிரி அமைப்புல இருக்கும். முருகர் உம்மாச்சியை எதுக்கு புஜங்க வழில பாடினார்னா, முருகன் பாம்பு ரூபம், கேரளா கர்னாடகால எல்லாம் இந்த உம்மாச்சியை ஸர்ப ரூபமாத்தான் ஆராதனை பண்ணுவா. வடக்க குமாரஸ்வாமி,கார்த்திக்,கார்த்திகேயாநு எல்லாம் ஆசையா அழைப்பா இந்த உம்மாச்சியை.
இந்த உம்மாச்சியை ஆராதனை பண்ணினா என்னவெல்லாம் கிட்டும்னு பார்த்தோம்னா, முருக பக்தாளுக்கு எப்போதுமே ஒரு இளமையான தோற்றம் இருக்குமாம், சஷ்டி கவசத்துல கூட "எந்த நாளும் ஈரெட்டாய் வாழ்வார்" ஒரு வரில வரும். சுப்ரமணியர் நவகிரகங்கள்ல செவ்வாயோட கிரக தேவதை. அதனாலதான் செந்தூரான்!னு ஒரு பேர் இவருக்கு. முருகனடிமைகள் எந்த காரியம் பண்ணினாலும் ஒரு சுறுசுறுப்போடையும்,ஆக்ரோஷத்தோடையும் பண்ணுவா, அதெல்லாம் செவ்வாய் கிரகத்தோட குணாதியசங்கள். ரூபத்துல மட்டும் இல்லாம புத்தியும் இவாளுக்கு எப்போதுமே ரொம்ப இளமையா இருக்கும். முருகனோட வேல் மாதிரி இவாளோட புத்தியும் ரொம்ப கூர்மையா இருக்கும். அசாத்தியமான தைரியம் இவாளோட மனசுல இருக்கும். இவ்ளோ இருந்தாலும் நான் ஒரு முருகனடிமை!னு தன்னை அடிமையாக்கிண்டு தன்னடக்கத்தோட இருப்பார்கள். அவாளுக்கு என்ன பிரச்சனைனாலும் //முருகன் அருள் முன் நிற்கும்//னு நெஞ்சை நிமிர்த்தி தைரியமாக இருப்பார்கள். அம்பாளை ப்ரதானமா ஆராதனை பண்ணக் கூடிய சாக்தர்கள் முருகனோட வேல் வழிபாட்டை விரும்புவார்கள். ஏன்னா, வேல் சக்தியோட இன்னொரு ஸ்வரூபம். வேல் வெறும் ஆயுதம் கிடையாது. ஒரு தெளிவான அறிவோட ரூபம். நம்மோட அறிவு நீளமானதா இருக்கனும், அதே சமயம் விசாலமான சிந்தனை இருக்கனும்,விஷயத்துக்குள்ள போகும் போது கூர்மையா இருக்கனும். அதுதான் வேல்.
நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றன் செயுங் குமரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்கு முன்னே வந்து தோன்றிடினே.
-அருணகிரிநாதர் (கந்தரலங்காரப்பாடல்)
விளக்கம் - குஞ்சலக் குட்டியான முருகனின் குஞ்சித பாதங்களும்,கால்சிலம்பும்,'ஜல் ஜல்' என ஜலஜலக்கும் கால் சதங்கையும்,தண்டையும்,அழகிய ஷண்முகனின் தோள்களும்,கடம்பும் எனக்கு முன்னாடி தெரியும் போது நாள், நக்ஷத்ரம்,கொடிய விதி என்று எதுவுமே எதுவும் பண்ணமுடியாது!னு அருணகிரினாதர் லயிச்சு பாடியிருக்கார்.
பலவிதமான கஷ்டங்களையும் வேலால விரட்டி தன்னோட பக்தாளோட வாழ்க்கைல நல்ல மாறுதலை உண்டாக்கி, மனதுக்கு ஆறுதலை தருவார் இந்த ஆறு தலை உம்மாச்சி.
ஷண்முகனோட ஒரு குட்டி ஸ்லோகம் இப்போ பாக்கலாமா??
//ஷண்முகம் ஷட்குணம் சைவ குமாரம் குலபூஷணம்
தேவஸேனாபதிம் வந்தே ஸர்வ கார்யார்த்த ஸித்தயே//
ஸ்லோகத்தோட அர்த்தம் - ஆறுமுகம் கொண்டவனும், ஆறு நல்ல குணங்களை உடைய எங்கள் குலத்தின் அணிகலனும், தேவஸேனையின் ஆத்துக்காரரும், காரியம் அனைத்திலும் வெற்றி தருபவனும் ஆகிய குமரனை அடி பணிகிறேன்.
(இந்த இடத்துல தேவஸேனையின் ஆத்துக்காரர்னு தான் அர்த்தம் எடுத்துக்கனும், ஏன்னா அவாத்து மாமி பெயரை சொல்லியாச்சுனா எல்லா மாமாவுமே ஒரு பயத்துல நமக்கு சாதகமா நம்ப வேலையை முடிச்சு குடுப்பா இல்லையா அதான்!)
Subscribe to:
Posts (Atom)